புதுடில்லி, யூரியா விலை உயர்த்தப்படாது என்று மத்திய ரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உர அமைச்சகத்தின் இணைஅமைச்சர் அனுபிரியா பட்டேல் தெரிவித்துள்ளதாவது:
பயிர்களுக்கு அதிகளவிலான யூரியாவை விவசாயிகள் பயன்படுத்துவதை தவிர்க்க செய்யவும், ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்கவும் அரசு கொள்கை முடிவு எடுத்தது. இதன் விளைவாக, யூரியா மூட்டையின் அளவை 50 கிலோவில் இருந்து 45 கிலோவாக சமீபத்தில் மத்திய அரசு குறைத்தது. சல்பர் பூசிய யூரியா ஒரு மூட்டை 50 கிலோவில் இருந்து 40 கிலோவாக குறைக்கப்பட்டது. விவசாயிகளின்மீது கூடுதல் நிதிச்சுமையை திணிப்பதை குறைக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தற்போது ஒரு மூட்டை வேம்பு சேர்க்கப்பட்ட யூரியா சில்லரை விலையில், 242 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சல்பர் முலாம் பூசப்பட்ட 40 கிலோ யூரியா மூட்டையின் விலை, 254 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. யூரியா விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எதுவும் தொழிற்சாலைகளிடம் இருந்து வரவில்லை. அதனால் விலை உயர்த்தப்படாது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
