புதுடில்லி: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஆதரவுடன், நம் நாட்டின் ராணுவ நடவடிக்கைகளை கேமராக்கள் வாயிலாக பதிவு செய்து அனுப்பிய கும்பலைச் சேர்ந்த 11 பேரை, டில்லி மற்றும் பஞ்சாப் போலீசார் நேற்று கைது செய்தனர்.
நம் நாட்டில் உள்ள முக்கிய இடங்கள், ராணுவ தளங்கள் உள்ளிட்டவற்றை படம்பிடித்து வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கும் கும்பல் குறித்து, டில்லி போலீசாருக்கு, தகவல் கிடைத்தது. இதையடுத்து, டில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் சிறப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், உளவு கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து சூரிய சக்தியில் இயங்கும் ஒன்பது ‘சிசிடிவி’ கேமராக்கள், நான்கு கை துப்பாக்கிகள் மற்றும் 24 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணை
இதற்கிடையே, ராணுவ புலனாய்வு அமைப்பு அளித்த புகாரின்பேரில், உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து பேர் அடங்கிய கும்பலை பஞ்சாப் போலீசார் நேற்று கைது செய்தனர். பஞ்சாபில் உள்ள கபூர் தலா, ஜலந்தர், பதான்கோட், பாட்டியாலா மற்றும் மோகாவில் உள்ள ராணுவ தளங்களை ரகசிய கேமராக்கள் வாயிலாக கண்காணித்தது தெரியவந்ததை அடுத்து, இந்த கும்பல் கைது செய்யப்பட்டது.
ஹரியானாவில் உள்ள அம்பாலா, ஜம்மு – காஷ்மீரில் உள்ள கதுவா, ராஜஸ்தானில் உள்ள பிகானேர் மற்றும் அல்வார் ஆகிய பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களையும் இவர்கள் நோட்டமிட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 11 பேரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதும், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஆதரவுடன் இயங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, டில்லி போலீசார் கூறியதாவது: நம் நாட்டில் உள்ள ராணுவ தளங்கள், எல்லையோர ராணுவ முகாம்கள் ஆகியவற்றை படம்பிடிக்க, பல இடங்களில் இந்த கும்பல் சூரியசக்தியில் இயங்கும் சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளது. ராணுவத்தினரின் செயல்பாடுகள், நடமாட்டம் போன்றவை ரகசிய கேமராக்கள் வாயிலாக படம்பிடிக்கப்பட்டுள்ளன.
போலி அடையாளத்துடன் பெறப்பட்ட, ‘சிம் கார்டு’ பொருத்தப்பட்ட இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள், மொபைல் போன் செயலி வாயிலாக நேரடி யாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தாக்குதல்
இதன் வாயிலாக, பாகிஸ் தான் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்தபடியே, நம் ராணுவத்தினரின் நடமாட்டத்தை நேரடியாக கண்காணித்துள்ளனர். இந்த பயங்கரவாத செயலுக்கு மூளையாக பஞ்சாபைச் சேர்ந்த மன்பிரீத் சிங் செயல்பட்டதுடன், பாகிஸ்தானைச் சேர்ந்த நபர்களுடன் தொடர்பிலும் இருந்துள்ளார்.
கேமராவில் பதிவான இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தவும் பாக்., உளவு அமைப்பினர் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில், மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
உத்தர பிரதேசத்தின் காஜியாபாதைச் சேர்ந்த உளவு கும்பல் ஒன்று, நாட்டின் முக்கிய பகுதிகளை படம்பிடித்த விவகாரத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
