சென்னை: த.வெ.க., சார்பில் அண்மையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ், ‘தி.மு.க., மிரட்டியதால் நடிகர் ரஜினி கட்சி துவங்குவதில் இருந்து பின்வாங்கினார்’ என, விமர்சித்தார்.
இதை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டித்ததோடு, நடிகர் ரஜினியும், ‘காலம் பேசாது; ஆனால், காத்திருந்து பதில் சொல்லும்’ என பூடகமான வார்த்தைகளால், கண்டனம் தெரிவித்திருந்தார். விவகாரம் அரசியல்ரீதியில் பூதாகரமானதும் பயந்து போன ஆதவ், பெரம்பூரில் நடத்திய த.வெ.க., தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார். இருந்தாலும், இந்த விவகாரம் அடங்கவில்லை.
ஆதவ் அர்ஜுனா போட்டியிட உள்ளதாக கூறப்படும், வில்லிவாக்கம் தொகுதியில், அவரை கடுமையாக விமர்சித்து, சிலர் போஸ்டர் ஒட்டி, தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
”யார் இந்த வில்லிவாக்கம் வில்லன் ?” என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், ‘வடகிழக்கு மாநில மக்களின் ரத்தத்தை உறிஞ்சி கொழுத்த கள்ள லாட்டரி மாபியா ஆதவ். இப்போது, வில்லிவாக்கம் தொகுதி மக்களின் உயிரை உறிஞ்ச வருகிறார்; எச்சரிக்கை’ என குறிப்பிட்டுள்ளனர். த.வெ.க., நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில், அந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன.
