"ரஜினி, ஆக்‌ஷன் சினிமா பிடிக்கும்; கட்சியை கண்டு பயம்" – மோகன்லால் நேர்காணலில் பினராயி விஜயன்

“சிறு வயதில் என் அம்மா எனக்கு பாடல்கள் சொல்லித்தருவார்கள். நான் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியபிறகு அம்மாவுக்கு கிருஷ்ணன் பாட்டு, ராமாயணம் மகாபாரதம் போன்றவற்றை வாசித்து சொல்லிக்கொடுத்திருக்கிறேன்” என்றார் பினராயி விஜயன்.

முதல்வர் பினராயி விஜயனுடன் நேர்காணல் நடத்திய மோகன்லால்

கண்டும் மிண்டியும் என்ற தலைப்பில் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நடிகர் மோகன்லால் நேர்காணல் நடத்தினார். நேர்காணலுக்கான டீசர்  “மக்கள் மனதில் நிறைந்த, மக்களை மனதில் நிறைத்த இருவர்’ என்ற வாசகத்துடன் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் நடிகர் மோகன்லால் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி நேற்று வெளியிடப்பட்டது. அதில் சர்ச்சைக்குரிய கேள்விகளோ, அரசியல் கேள்விகளோ இடம்பெறவில்லை. முதல்வர் பினராயி விஜயன் தனது தனிப்பட்ட வாழ்க்கை, விரும்பும் உணவு உள்ளிட்டவை குறித்து பகிர்ந்துகொண்டார். அதில் மோகன்லால் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “மாற்றுக்கருத்து உள்ளவர்கள் மீது எனக்கு வெறுப்பு இல்லை. என் வாழ்க்கையில் இதுவரை தவறு செய்ததாக நினைக்கவில்லை. எனக்குப் பயம் என்பது கட்சி மீது மட்டும்தான்.

என் மீதான குற்றச்சாட்டுகள் என்னை பாதிக்கவில்லை.  பிடித்த திரைப்படங்களில் ஒன்று மோகன்லால் நடித்த அமிருதங்கமய ஆகும். எனக்கு ரஜினி நடித்த சினிமாக்கள் மிகவும் பிடிக்கும். பொதுவாகவே ஆக்‌ஷன் படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம்.

கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நேர்காணல்.நடத்திய நடிகர் மோகன் லால்
கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நேர்காணல்.நடத்திய நடிகர் மோகன் லால்

வீட்டு உணவுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். சிங்கப்பூர் பயணம் எனக்கு பிடித்தமான பயணமாக இருந்தது. எங்களுக்குப் பிறகு எங்களை விட்டுச் செல்ல வேண்டியவர்கள் எங்களை விட்டுச் சென்றதால் பெரும் துயரம் ஏற்பட்டது. கொடியேரி பாலகிருஷ்ணனின் மறைவால் நான் மிகவும் வேதனையடைந்தேன். எனது உத்வேகம் ஏ.கே.ஜி. என்னுடன் உடன்படாதவர்கள் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. நான் எப்போதும் கட்சியிலேயே இருப்பேன். என்னை தளர்வடையச் செய்யும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நான் சொன்னதை மக்கள் கேட்டனர். சிறு வயதில் என் அம்மா எனக்கு பாடல்கள் சொல்லித்தருவார்கள். நான் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியபிறகு அம்மாவுக்கு கிருஷ்ணன் பாட்டு, ராமாயணம் மகாபாரதம் போன்றவற்றை வாசித்து சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அதன்மூலம் சன்னியாச வாழ்க்கையின் ஒரு அம்சம் என் வாழ்க்கையில் ஏற்பட்டது.

முதல்வர் பினராயி விஜயனிடம் நடிகர் மோகன்லால் நடத்திய நேர்காணல்
முதல்வர் பினராயி விஜயனிடம் நடிகர் மோகன்லால் நடத்திய நேர்காணல்

கல்லூரியில் படித்த நாட்களில் எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். மிகவும் பணக்காரரான அவர் ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையானார். அப்போது நான் மாணவர் அரசியலில் ஈடுபட்டிருந்தேன். நான் என் நண்பரிடம், ‘மது அருந்தாதே, மதுவை பயன்படுத்தக் கூடாது’ என்று சொன்னேன். காலம் செல்லச் செல்ல, அவரது குடிப்பழக்கம் எல்லை மீறிச் சென்றது. அதனால் நான் அவரது நட்பை முறித்துக் கொண்டேன். பின்னர், அவர் ஒரு தீவிர குடிகாரராக மாறி சாலை ஓரங்களில் அமர்ந்திருக்கும் அளவுக்குச் சென்றார். நான் நட்பை முறித்துக் கொண்டது  அவரை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச் சென்றதாக நான் அடிக்கடி எண்ணுவேன். நான் அப்போது அவரை விட்டுச் செல்லாமல் இருந்திருந்தால், இவ்வளவு குடிகாரராக மாறியிருக்க மாட்டார் என்று பின்னர் உணர்ந்தேன்” என்றார்.

இது தேர்தலுக்கான பி.ஆர் நிகழ்ச்சி என காங்கிரஸ் விமர்சித்து உள்ளது.

Source link