டெஹ்ரான், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் கொலைக்கு பழிவாங்க உத்தரவிட்டு அந்நாட்டு மதத் தலைவர்கள், ‘பத்வா’ எனப்படும் மத உத்தரவு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதலில் மேற்காசிய நாடான ஈரானில் 36 ஆண்டுகளாக உச்ச தலைவராக இருந்த மூத்த மதகுரு அயதுல்லா அலி கமேனி, 83, அவரது குடும்பத்தினருடன் கொல்லப்பட்டார். இதற்கு எதிராக ஈரானில் மட்டுமல்ல, பிற நாடுகளிலும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஈரானின் மிக மூத்த மதகுரு இருவர், கமேனி கொலைக்கு என்ன தண்டனை என்பதை விளக்கி பத்வா எனப்படும் முஸ்லிம் சட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அதில், 99 வயதான அயதுல்லா நாசர் மகாரெம் ஷிராசி என்ற மதகுரு, அமெரிக்காவையும் இஸ்ரேலையும் முதன்மை குற்றவாளிகள் என குறிப்பிட்டுள்ளார்.
‘இந்த குற்றவாளிகளின் தீமையை உலகிலிருந்து அழிக்கும் வரை பழிவாங்குவது உலக முஸ்லிம்களின் மதக் கடமை’ என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ‘ஜிஹாத்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தை முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோன்று நுாரி ஹமதானி என்ற மற்றொரு மதகுரு, குவோம் நகரில் உள்ள செமினரி மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் சபையின் கோரிக்கைக்கு பதிலளித்து, ‘புரட்சியின் தியாகத் தலைவரின் ரத்தத்தை சிந்தியவர்களின் ரத்தத்தை சிந்த வைப்பது அனைத்து முஸ்லிம்களின் கடமை’ என அறிவித்துள்ளார்.
இந்த பத்வாக்கள் வெளியானதும், அமெரிக்க உளவுத்துறை, உலக அளவில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது. மேலும் ஐரோப்பா, குறிப்பாக ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் ஈரான் தொடர்புடைய ‘ஸ்லீப்பர் செல்கள்’ குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
