ரயில்வே அமைச்சருக்கு தமிழக அமைச்சர் சிவசங்கர் பதில்

சென்னை: ”தமிழகத்தில், பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு கையகப்படுத்தப்பட்ட, 931.52 ஹெக்டேர் நிலங்களுக்கு, ரயில்வே துறை இன்னும் நிதி ஒதுக்கவில்லை,” என, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவ சங்கர் தெரிவித்தார்.


அவர் அளித்த பேட்டி: கடந்த ஐந்து ஆண்டு களில், தமிழகத்தில் 148.65 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை, ஏழு திட்டங்களுக்கு, கையகப்படுத்த, ரயில்வே துறை கூறியதன் அடிப்படையில், தமிழக அரசு நில எடுப்பு பணியை துவக்கியது. ஆனால், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, 739.31 கோடி ரூபாயை மட்டுமே, ரயில்வே ஒதுக்கி உள்ளதால், நில எடுப்பு பணிகளை விரைந்து முடிப்பதில் சிரமம் உள்ளது.

தமிழகத்தில் தற்போது, மத்திய அரசின் ரயில்வே திட்டங்களுக்கு, 2500.61 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களை கையகப்படுத்த, நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 931.52 ஹெக்டேர் நிலங்களுக்கு, ரயில்வே நிதி ஒதுக்கவில்லை.

தமிழகத்தில் முக்கியமான, 19 ரயில்வே திட்டங்களுக்கு, 1,273.05 ஹெக்டேர் நிலம் எடுக்க வேண்டிய நிலையில், 1198.02 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணி முடிந்துள்ளது. அதாவது 94 சதவீதம் நிலம், ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

தவறான செய்தி

ரயில்வே அமைச்சர், கடந்த ஜன.,10ம் தேதி, மதுரை – அருப்புக்கோட்டை- தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட, தமிழக அரசு கோரியதாகவும், அதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தமிழக அரசு ஒரு போதும், அவ்வாறு தெரிவிக்கவில்லை.

இந்த திட்டத்திற்கு, 926.68 ஹெக்டேர் நிலத்தை எடுத்து, ரயில்வே துறைக்கு ஒப்படைக்குமாறு, மதுரை, விருதுநகர், துாத்துக்குடி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் உட்பட, அனைத்து ரயில்வே திட்டங்களுக்கும், போதுமான நிதி ஒதுக்கும்படி, 2024 ஆக.,19ல் ரயில்வே அமைச்சருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில்-, தமிழக அரசு வேண்டாம் எனக் கூறியதாக, மத்திய அமைச்சர் கூறலாமா?

மதுரை — துாத்துக்குடி அகல ரயில்பாதை திட்டம் தொடர்பாக, மீளவிட்டான் – மேலமருதுார் வரை, 18 கி.மீ. அளவில் பணி முடிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள பகுதிகளில், குறைந்த சரக்கு வாய்ப்புகள் உள்ளதால், திட்டம் கைவிடப்பட்டதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை கைவிடும்படி, தமிழக அரசு கோரவில்லை. இத்திட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.

கையகப்படுத்தப்படும் நிலங்கள்

தமிழகத்தில், திண்டிவனம் – – நகரி அகல ரயில்பாதை; விழுப்புரம் – திண்டுக்கல் உட்பட 10க்கும் மேற்பட்ட ரயில் பாதை திட்டங்களுக்கு, நில எடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு, ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்களை, விரைவாக கையகப்படுத்தி, வழங்கி வருகிறோம். ரயில்வே துறைக்கு நிலங்கள் வழங்கப்படவில்லை என்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Source link