புதுடில்லி:ரெயில்வேயின் உள்கட்டமைப்பில் தனியாரை ஊக்குவிக்கும் பொருட்டு முதலீட்டை மீட்டெடுப்பதற்கான காலத்தை 50 ஆண்டுகளாக நீட்டிக்க உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளதாவது:
ரயில்வே வழித்தடங்கள் அமைப்பது, ரயில் நிலைய சீரமைப்பு போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களில் தனியாரை ஊக்குவிக்க சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன்படி, பொது மற்றும் தனியார் பங்களிப்பு கொள்கையில் சலுகை காலம் 50 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது தனியாருக்கான சலுகை காலம் 20 மற்றும் 35 ஆண்டுகளுக்கிடையே உள்ளது. இதனால் தனியார் முதலீட்டாளர்கள் முதலீட்டை மீட்டெடுக்க முடியாத நிலை உள்ளது. இந்த சலுகை தனியார் முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டை மீட்டெடுக்க உதவும். இதன் வாயிலாக ரயில்வே திட்டங்களில் தனியாரின் பங்களிப்பு அதிகமாகும்.
இதுகுறித்த முன்மொழிவுகள் ரயில்வே நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கு அனுமதி வழங்கப்பட்டால் 10 ஆண்டுகளுக்கு பிறகு பொது மற்றும் தனியார் திட்டத்தில் மிகப்பெரிய சீர்த்திருத்தமாக இருக்கும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.
