ரயில் பாதை பணிக்கு 4,326 ஹெக்டர் நிலம் தேவை;தமிழக அரசு ஒதுக்கியது 1,052 ஹெக்டர் மட்டுமே: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

சென்னை : ”புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தும்போது, சென்னை – பெங்களூருக்கு ஒரு மணி நேரம் 13 நிமிடங்களிலும், சென்னை – ஹைதராபாத்துக்கு இரண்டு மணி நேரம், 55 நிமிடத்திலும் செல்ல முடியும்,” என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மத்திய அரசு பட்ஜெட்டில், ரயில்வே துறைக்கு மட்டும், 2.93 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக, அமைச்சர் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில், தெற்கு ரயில்வேக்கு, 7,611 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடுகையில், ஒன்பது மடங்கு அதிகம். ரயில்வேயில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், ஏழு வழித்தடங்களில் புல்லட் ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

அதில், தெற்கு ரயில்வேயில், சென்னை — கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் சென்னை — தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் வழித்தடங்களில், இந்த ரயில் திட்டம் செயல்படுத்த உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இந்நகரங்கள் உள்ளன.

இந்த புல்லட் ரயில் திட்டங்களுக்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது, சென்னை – பெங்களூருக்கு, ஒரு மணி நேரம் 13 நிமிடங்களில் செல்ல முடியும்; சென்னை – ஹைதராபாத்துக்கு இரண்டு மணி நேரம், 55 நிமிடத்தில் செல்ல முடியும்.

தமிழகத்தில் நடந்து வரும் புதிய பாதைகள் அமைக்கும் திட்டங்களுக்கு, மொத்தம் 4,326 ஹெக்டர் நிலம் தேவை. இதுவரை தமிழக அரசு, 1,052 ஹெக்டர் நிலம் மட்டுமே கையகப்படுத்தி தந்துள்ளது. மொத்த தேவையில், 24 சதவீதம் அளவுக்கே நிலம் வழங்கி உள்ளது. எனவே, ரயில் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற, போதிய நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி தர வேண்டும்.

குறிப்பாக, மன்னார்குடி – பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு இன்னும் நிலம் கையகப்படுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த பட்ஜெட்டை விட அதிக நிதி ஒதுக்கீடு

தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின்குமார், சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் ஆகியோர் அளித்த பேட்டி:கடந்த மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, 6,331 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, 7,611 கோடி ரூபாயும், கேரளா ரயில்வே திட்டங்களுக்கு, 3,795 கோடி ரூபாய் என, 11,406 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய மற்றும் அகல் பாதை திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. புதிய ரயில் பாதை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த, தமிழக அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். சென்னையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பணிகள் முடிந்து விட்டன. அடுத்த மாதம் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link