மாஸ்கோ: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி, நச்சு தவளையின் விஷத்தை பயன்படுத்தி கொல்லப்பட்டதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை ரஷ்யா நிராகரித்துள்ளது.
ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சி தலைவராக விளங்கியவர் அலெக்ஸி நவால்னி, 47. வழக்கறிஞரான இவர், ரஷ்யாவின் நடக்கும் ஊழல்களுக்கு எதிராக போராடியதையடுத்து அந்நாட்டில் பிரபலமானார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தார்.
புடினின் ‘யுனைடெட் ரஷ்யா’ கட்சியை திருடர்கள் மற்றும் கொள்ளைக்காரர்களின் கட்சி என பகிரங்கமாக அழைத்தார். இளைஞர்களை திரட்டி ரஷ்யா முழுதும் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினார்.
கடந்த 2021ல், பல பழைய வழக்குகளில் நவால்னிக்கு சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து, நவால்னியின் ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளையை, தீவிரவாத அமைப்பாக அந்நாட்டு அரசு அறிவித்தது.
இதையடுத்து, இந்த அமைப்புக்காக நிதி திரட்டியது, இரண்டாம் உலகப் போர் தொடர்பான வரலாற்றை தவறாக சித்தரித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த 2023ல், நவால்னிக்கு, 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நவால்னி சைபீரியாவில் உள்ள சிறையில் இருந்தபோது, கடந்த 2024 பிப்ரவரியில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இது குறித்து ரஷ்ய சிறைத்துறை கூறுகையில், சிறை வளாகத்தில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக தெரிவித்திருந்தது.
அதேவேளையில், நவால்னியின் குடும்பத்தினரும், ஐரோப்பிய நாடுகளும் அவருக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டி இருந்தனர்.
இதை நிரூபிக்கும் வகையில், ஜெர்மனியின் மியூனிக்கில் நடந்த சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஐந்து ஐரோப்பிய நாடுகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில் ‘எபிபாட்டடின்’ என்ற, தவளையின் மிகக்கொடிய நச்சு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இக்குற்றச்சாட்டுக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா சகாரோவா மறுப்பு தெரிவித்துள்ளார். இக்குற்றச்சாட்டு மேற்கத்திய நாடுகளின் பொய் பிரசாரம் என கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், தங்கள் உள்நாட்டு பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே இதுபோன்ற வினோதமான கதைகளை அவர்கள் உருவாக்கி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
