ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா 'அனுமதி' அளிப்பதாக கூறும் அமெரிக்கா

வாஷிங்டன்:ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க 30 நாட்களுக்கு ‘அனுமதி’ அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு:

உலக சந்தையில் கச்சா எண்ணெய் வினியோகம் தடங்கல் இல்லாமல் நடப்பதை உறுதி செய்ய, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க 30 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த குறுகிய கால நடவடிக்கையால் ரஷ்யாவுக்கு பொருளாதார ஆதாயம் கிடைக்காது.

ஏற்கனவே கடலில் தேக்கமடைந்துள்ள கச்சா எண்ணெயை வாங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதே இதற்கு காரணம். அமெரிக்காவின் அத்தியாவசிய கூட்டாளியான இந்தியா, எங்களிடம் இருந்து அதிகளவில் எண்ணெய் வாங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ஈரான் உடனான அமெரிக்கா, இஸ்ரேல் போரால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வரத்துக்கு அச்சுறுத்தல் எழுந்ததால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. உக்ரைன் போரை காரணம் காட்டி, ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க தடை விதித்த நிலையில், தற்போது ஈரான், இஸ்ரேல் போரால் தட்டுப்பாட்டை தவிர்க்க, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை இந்தியா வாங்குகிறது.

இந்த கொள்முதல் துவங்கியது தெரிய வந்த நிலையில், தனது அனுமதியை பெற்றே இது நடைபெறுவதாக உலக அரங்கில் தெரிவதற்காக, இந்தியாவுக்கு ஒரு மாதம் அனுமதி அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

வாங்கி குவிக்கும் இந்தியா
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதில் ஏற்பட்ட தடை நீங்கியதால், நம் நாட்டுக்கு அருகே கடலில் நின்றிருக்கும் ரஷ்ய எண்ணெய் கப்பல்களில் இருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள், 1.50 கோடி பீப்பாய்களுக்கு மேல் வாங்கி குவித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source link