வாஷிங்டன்: ”கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியா சந்திக்கும் அழுத்தத்தை குறைக்கவே, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க தற்காலிக விலக்கு அளித்தேன்,” என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துகின்றன. பதிலுக்கு இரு நாடுகளையும் பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கடந்த சில நாட்களாக முடக்கி உள்ளது.
உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில், 20 சதவீதம் இந்த கடல் வழியாகவே நடக்கிறது. தற்போது கச்சா எண்ணெய் போக்குவரத்து, 80 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
இதனால், சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 92 டாலராக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால், 100 டாலரை தாண்டி செல்லும். இதே போல் இயற்கை எரிவாயு வினியோகமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்பட்டது. நமக்கு ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்கி வந்த நிலையில், அமெரிக்கா நம் இறக்குமதிகளுக்கு, 50 சதவீத வரி விதித்ததால் அவற்றை வாங்குவதை நிறுத்தி இருந்தோம்.
தற்போது ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக மீண்டும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க துவங்கி உள்ளோம். இது குறித்து அமெரிக்காவுக்கும் தெரிவிக்கப்பட்டது.
அந்நாட்டு நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், ‘உலக சந்தையில் கச்சா எண்ணெய் வினியோகம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காக இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க, 30 நாட்கள் தற்காலிக விலக்கு வழங்கப்படுகிறது’ என தெரிவித்தார்.
அதிபர் டிரம்பிடம் இந்த முடிவு பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, ”கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவுக்கு ஏற்படும் அழுத்தத்தை சிறிதளவு குறைக்கவே விலக்கு அளித்தேன்,” என்றார்.
