தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தவெகவை நோக்கி பிற கட்சியை சார்ந்த பலரும் சென்று கொண்டிருக்கின்றனர். குறிப்பாக அதிமுகவை சார்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என பலரும் தவெகவில் இணைந்துள்ளனர். அதிலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்தனர். இது அரசியல் வட்டராத்தில் பல விதமான விவாதங்களை கிளப்பி இருந்தது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக அதிமுக இரண்டு அணிகளாக செயல்பட்ட நிலையில், எஸ்.பி. வேலுமணி குழுவில் இருந்த எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். மதுராந்தகம் மரகதம் குமாரவேல், பெருந்துறை எஸ். ஜெயக்குமார், தாராபுரம் பி. சத்தியபாமா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பெரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து, ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர்.
இது பலவிதமான விமர்சனங்களையும், அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியில் தவெக ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் கரூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விராலிமலை சி. விஜயபாஸ்கர் இருவரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இதனிடையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு எதிராக அதிமுக சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சபாநாயகரிடம் ராஜினாமா செய்த எம்எல்ஏக்களுக்கு எதிராக புகார் மனு அளிக்கப்பட்டது. இது சம்பந்தமாக விளக்கம் கேட்டு முதலில் ராஜினாமா செய்த நான்கு எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர்.
இதனையடுத்து சட்டப்பேரவை தலைவர் முன்பாக நேரில் ஆஜராகி சத்தியபாமா மற்றும் ஜெயகுமார் ஆகியோர் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர். இந்நிலையில் இவர்களும் மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக ஜூலை 30 ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவு ஒன்றினை பிறப்பித்து இருந்தார்.
இந்நிலையில் இதில் மாற்றம் செய்து சட்டப்பேரவை செயலர் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி ராஜினாமா செய்த குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா ஜெயகுமார் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆகஸ்ட் நான்காம் தேதி ராஜினாமா விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார். அதாவது நாளை விளக்கம் கேட்பதாக இருந்த நிலையில், தற்போது அந்த தேதி ஆகஸ்ட் நான்காம் தேதி மாற்றப்பட்டுள்ளது.
இந்த திடீர் மாற்றத்துக்கான காரணம் குறித்து விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. அதே நேரம் ஆகஸ்ட் நான்காம் தேதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நான்கு அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட இபிஎஸ் தரப்பினர் விளக்கத்தினை சபாநாயகர் கேட்கவுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது. இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
