ராணிப்பேட்டையில் மாயமான 1 வயது குழந்தை 35 நாட்களுக்குப் பின் ஆந்திராவில் மீட்பு

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை பகுதியில் கடந்த மாதம் 24-ம் தேதி நள்ளிரவு வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட 1 வயது பெண் குழந்தை மகேஸ்வரி, 35 நாட்களுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரெயில் நிலையம் அருகே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாயமான குழந்தை

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர்-பிரேமா தம்பதியரின் 1 வயது பெண் குழந்தை மகேஸ்வரி. கடந்த மாதம் 24-ம் தேதி இரவு, இவர்கள் வீட்டின் வெளிப் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் குழந்தை திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

6 தனிப்படைகள் அமைப்பு

குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில், குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

அதிகாலையில் அதிரடி மீட்பு

தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், குழந்தை ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) அதிகாலை ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா ரெயில் நிலையம் அருகே தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு 35 நாட்களாக கடத்தி வைக்கப்பட்டிருந்த குழந்தை மகேஸ்வரியை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

5 பேர் கைது – தீவிர விசாரணை

குழந்தை மீட்கப்பட்ட இடத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் மல்லீஸ்வரி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவருக்கு குழந்தையைக் கடத்திக் கொடுத்ததாக ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் உட்பட மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் குழந்தையை எதற்காக கடத்தினார்கள், இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட குழந்தை விரைவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Source link