புதுடில்லி: ‘உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 8.3 சதவீதம் பெற்று, ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது’ என, ‘சிப்ரி’ எனப்படும் ‘ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்’ தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில், சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
முதலிடம்
‘சிப்ரி’ எனப்படும், இந்த நிறுவனம் 1966 முதல் உலகளாவிய ஆயுதங்கள், ஆயுத குறைப்பு மற்றும் அது தொடர்பான சர்வதேச போக் குகளை கண்காணித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், 2021 – 25 காலக்கட்டத்தில், உலகின் 10 ஆயுத இறக்குமதியாளர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதன் விபரம்:
கடந்த 2021 – 25 வரையிலான காலக்கட்டத்தில், ரஷ்யாவுடன் போரை சந்தித்து வரும் ஐரோப்பிய நாடான உக்ரைன், உலகளாவிய ஆயுத இறக்குமதியில் முதலிடத்தில் உள்ளது. உலகளவில் 9.7 சதவீத அளவு ஆயுத இறக்குமதியை உக்ரைன் செய்து வருகிறது.
அடுத்ததாக, 8.3 சதவீதத்துடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள், இந்தியாவின் முன்னணி ஆயுத சப்ளையர் களாக உள்ளன.
இதில், ரஷ்யா 40 சதவீதமும், பிரான்ஸ் 29 சதவீதமும், இஸ்ரேல் 15 சதவீதமும் பங்கு வகிக்கின்றன.
முந்தைய ஐந்து ஆண்டுகளான 2016 – 20 வரையிலான காலக்கட்டத்தை ஒப்பிடுகையில், இந்தியாவின் ஆயுத இறக்குமதி 4 சதவீதம் குறைந்துள்ளது.
‘ஆத்மநிர்பர் பாரத்’ எனப்படும் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே ராணுவ உற்பத்தி திறனை அதிகரித்துள்ளதால், ஆயுத இறக்குமதி சதவீதத்தில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், வெளிநாடுகளில் இருந்து ஆயுத தேவை இருப்பதால், இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது.
அதிகரிப்பு
ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து 140 போர் விமானங்கள், மற்றொரு ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் இருந்து ஆறு நீர்மூழ்கி கப்பல்கள் உட்பட சமீபத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து பெரிய அளவிலான இறக்குமதியை இந்தியா செய்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், தன் ராணுவ கொள்முதல் ஆதாரங்களை இறக்குமதி செய்வதை இந்தியா அதிகரித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து அதிகளவு ஆயுதங்கள் இறக்குமதி செய்த நிலையில், அவற்றை குறைத்து, பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து கொள்முதல் செய்ய துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
