புதுடில்லி: ‘மேற்காசியா மற்றும் உக்ரைனில் நடக்கும் போர்களை விரைவாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’ என, பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடான பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியை டில்லியில் நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். அப்போது இந்தியா – பின்லாந்து இடையே மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குடியேற்ற ஒத்துழைப்பு ஒப்பந்தம்:
இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள் பின்லாந்தில் வேலை செய்யும் வாய்ப்பை இந்த ஒப்பந்தம் எளிதாக்குகிறது.
சுற்றுச்சூழல் ஒப்பந்தம்:
கடந்த, 2020ல் போடப்பட்ட இந்த ஒப்பந்தம் தற்போது புதுப்பிக்கப்பட்டது. இதன் கீழ் கழிவுகளில் இருந்து மின்சக்தி, பசுமை ஹைட்ரஜன், காற்றாலை, மின்சக்தி சேமிப்பு தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படும்.
புள்ளிவிபரத் துறையில் ஒத்துழைப்பு:
இதன் மூலம் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களை தயாரிக்கும் நடைமுறைகள் மற்றும் அனுபவங்களை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ள முடியும்.
ஒப்பந்தங்கள் கையெழுத்தான பின், பின்லாந்து அதிபர் ஸ்டப் உடன் இணைந்து செய்தியாளர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியா – பின்லாந்து செயற்கை நுண்ணறிவு, 6ஜி தொலைத்தொடர்பு, துாய்மையான எரிசக்தி மற்றும் குவான்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட உயர்தர தொழில்நுட்ப துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம்.
டிஜிட்டல் தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி போன்ற துறைகளில் இந்தியா மற்றும் பின்லாந்து முக்கிய நட்பு நாடுகள்.
உக்ரைன் மற்றும் மேற்காசியாவில் தற்போது நடக்கும் மோதல்கள் கவலை தருகின்றன. இதற்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும்.
எந்த பிரச்னையையும் ராணுவ மோதலால் மட்டும் தீர்க்க முடியாது. சட்டத்தின் ஆட்சி, பேச்சு மூலம் தீர்வு காண்பது மற்றும் துாதரக அணுகுமுறையை இந்தியாவும், பின்லாந்தும் நம்புகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
