ராமநாதபுரம் அ.தி.மு.க., மாவட்ட செயலர் முனியசாமி, தன் மனைவி கிருத்திகா நிற்கும் திருவாடானையில் மட்டுமே வேலை செய்வதால், நிர்வாகிகள் கொதிப்படைந்துள்ளனர்.
இதுகுறித்து, ராமநாதபுரம் அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: ராமநாதபுரம் அ.தி.மு.க., மாவட்ட செயலராக உள்ள முனியசாமி, மாவட்ட அமைச்சரான ராஜ கண்ணப்பன், தி.மு.க., மாவட்ட செயலர் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கத்துடன் மிக நெருக்கமாக இருக்கிறார். அவர்களை எதிர்த்து அரசியல் செய்வதே இல்லை. அதோடு, தன்னை விட தன் மனைவியை தான் முன்னிலைப்படுத்துகிறார்.
தற்போது, முதுகுளத்துாரில் அமைச்சர் ராஜ கண்ணப்பனும், ராமநாதபுரத்தில் முத்துராமலிங்கமும் நிற்பதால், முனியசாமி தன் மனைவியை திருவாடானைக்கு மாற்றி விட்டார். அவர் மனைவியின் வெற்றிக்கு உழைப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக, பிற தொகுதிகளின் தேர்தல் பணிகளை சுணங்க வைப்பதில் நியாயமே இல்லை.
இதற்கு கைமாறாக, திருவாடானையில் அமைச்சரும், தி.மு.க., – மா.செ.,வும் காங்கிரசுக்கு வேலை செய்யாமல் உள்ளனர். அதாவது, 2016 சட்டசபை தேர்தலில், முதுகுளத்துாரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு முனியசாமி மனைவி கிருத்திகாவை தோற்கடித்த மலேசியா பாண்டி தான், இம்முறை அ.தி.மு.க.,சார்பில் அந்த தொகுதியில் நிற்கிறார். மனைவியை தோற்கடித்த கோபத்தில், பாண்டிக்கு வேலை செய்ய முனியசாமி மறுக்கிறார்.
அதேபோல், பரமக்குடி தனி தொகுதியில் போட்டியிடும் முத்தையாவையும், ராமநாதபுரத்தில் நிற்கும் பா.ஜ., வேட்பாளர் நாகேந்திரனையும் கைவிட்டு விட்டார். அங்கிருந்து அ.தி.மு.க., நிர்வாகிகளை அழைத்து வந்து, திருவாடானையில் வேலை செய்ய வைக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
