ராமநாதபுரம் : ”தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ., மூலம் பயங்கரவாதத்தை பரப்புகின்றனர்,” என, ராமநாதபுரத்தில் பா.ஜ., வேட்பாளர் நாகேந்திரனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட தேசிய தலைவர் நிதின் நபின் பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது: தமிழகத்தில் 8,900 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தும் முதல்வர் ஸ்டாலின் அனுமதி தரவில்லை. காரணம், அவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிரானவர்கள். அது மட்டுமின்றி தாஜா செய்யும் அரசியல் நடத்துகின்றனர். தீபம் ஏற்றவிடாமல் தடை செய்வதவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். வரும் ஏப்.,23 ல் அதை செய்ய வேண்டும். தே.ஜ.,கூட்டணிக்கு நீங்கள் வாக்களித்தால் தண்டனையை நாங்கள் கொடுக்கிறோம்.
துணை முதல்வர் உதயநிதி சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா என கூறுகிறார். இதற்கு காங்., தலைவர் ராகுல் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆனால், கேரளாவில் சென்று சபரிமலை விஷயத்தை பேசுகின்றனர். இதுதான் இவர்களின் இரட்டை வேடம். தமிழகத்தில் சனாதன தர்மத்தை விரோதியாக பார்க்கும் அரசு இருந்து கொண்டிருக்கிறது.தமிழகத்தில் ஏழைகள் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. தமிழகத்தில் ரூ.5,000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும்.முதல்வர் ஸ்டாலின் மாநில வளர்ச்சிக்காக எந்த வேலையும் செய்யவில்லை. தே.ஜ., கூட்டணி அரசு அமைந்த பின் தமிழக வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும்.இவ்வாறு நிதின் நபின் பேசினார்.
போட்டி
சாத்துாரில் பா.ஜ., வேட்பாளரான மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தேசிய தலைவர் நிதின் நபின் ரோடு ஷோ நடத்தினார்.
பின் தேசிய தலைவர் அளித்த பேட்டி: நாட்டிலேயே ஊழல் நிறைந்த திமுக அரசை அதிமுக கூட்டணி நிச்சயம் வீழ்த்தும். தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிச்சயம் வெற்றி பெறுவார். இந்த தேர்தல் தமிழகத்திற்கும், டில்லிக்கும் இடையேயான தேர்தல் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் இந்த தேர்தல் ஊழலுக்கும், நல்லாட்சிக்கும் இடையேயான ஒரு போட்டி. இதில் திமுக அரசு ஊழலுடன் நிற்கிறது. அதிமுக கூட்டணி நல்லாட்சிக்காக நிற்கிறது.
பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடி பெண்களுக்கு அதிகாரமளிக்க சட்டம் இயற்றும் நடவடிக்கையை எடுத்துள்ளார். ஆனால் முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., கூட்டணி கட்சிகள் இந்த சட்டத்தை எதிர்த்து பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படுகின்றனர் என்றார்.
