ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் சட்டசபை தொகுதியில், கடந்த தேர்தலில் தி.மு.க., சார்பில் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்று அமைச்சராக இருந்து வருகிறார். போக்குவரத்து துறை அமைச்சர், அதன்பின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், தொடர்ந்து உயர் கல்வித்துறை அமைச்சர் என பணியாற்றிய இவர், தற்போது வனத்துறை அமைச்சராக உள்ளார்.
தி.மு.க.,வில் நான்கு முறை துறை மாற்றப்பட்ட ஒரே அமைச்சர் ராஜ கண்ணப்பன் தான். பல சர்ச்சைகளிலும் சிக்கியவர்.
இவருக்கும் ராமநாதபுரம் எம்.எல்.ஏ.,வான தி.மு.க., மாவட்ட செயலர் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கத்திற்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது.
இவர் ஐந்து ஆண்டுகளில், கிராமங்களுக்கு பயணியர் நிழற்குடை, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்துள்ளார். சிக்கல், தனி ஒன்றியமாக அறிவிக்கப்படும் என்று அறிவித்த நிலையில், தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை.
மேலும் இவர் சொன்ன, பொறியியல் கல்லுாரி உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இந்நிலையில், தன் சமுதாயமான யாதவர் ஓட்டுகளை நம்பி மீண்டும் போட்டியிடுகிறார்.
தற்போது அ.தி.மு.க., சார்பிலும் அவரது சமுதாயத்தை சேர்ந்த முதுகுளத்துார் முன்னாள் எம்.எல்.ஏ., ‘மலேஷியா’ பாண்டி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், காங்., சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்அ.தி.மு.க.,விற்கு தாவியவர்.
ராஜ கண்ணப்பனும், பாண்டியும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஓட்டுகள் இரண்டாகப் பிரியும் நிலையுள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் அ.ம.மு.க., இருப்பதால் அக்கட்சியின் ஓட்டுகளும் அ.தி.மு.க.,விற்கு கிடைக்கும்.
பாண்டி சொந்த தொகுதியைச் சார்ந்தவர். இருவரும் தமது சமுதாயத்தை சார்ந்த ஓட்டுகளை நம்பி களமிறங்கும் நிலையில், சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஓட்டுகள் யாருக்கு விழுகிறதோ அதை பொறுத்து வெற்றி தீர்மானமாகும்.
