ராயபுரம்: ”அ.தி.மு.க.,வில் பதவி, பொறுப்பு கிடைத்ததால், காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன்; அது தவறில்லை. ஆசிர்வாதம் வாங்குவது தமிழர்களின் பண்பு,” என, அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., கூறினார்.
ராயபுரம் தொகுதி வேட்பாளர் ஜெயகுமார், துறைமுகம் தொகுதி வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வண்ணாரப்பேட்டை, கல்மண்டபம் சாலையில் பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
எங்களை ஆளாக்கியவர்கள் எம்.ஜி.ஆர்., – ஜெயலலிதா தான். நாங்கள் அவர்களது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதில் என்ன தவறு உள்ளது.
அ.தி.மு .க., பதவி, பொறுப்பு கிடைத்ததால் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன்; அது தவறில்லை. ஆசிர்வாதம் வாங்குவது தமிழர்களின் பண்பு.
உதயநிதி, உங்கள் தாத்தா கருணாநிதி, அப்பா ஸ்டாலின் முதல்வராக இருந்தவர்கள்; உங்களுக்கு வசதி, வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் கட்சியில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உழைத்து, முன்னேறி பெரிய பதவிக்கு வந்துள்ளோம். அந்த வலி எனக்கு தெரியும்.
கட்சிக்காக 51 ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன். கட்சி அறிவித்த போராட்டங்களில் பங்கேற்று 7 முறை சிறை சென்றிருக்கிறேன். நாங்கள் மக்களுக்காக போராட்டம் செய்து சிறை சென்றோம்; நீங்கள் ஊழல் செய்து சிறை சென்றீர்கள்.
அ.தி.மு.க., இப்போது ‘அமித்ஷா. தி.மு.க., வாகி விட்டது’ என பேசுகின்றனர். நாட்டின் உள்துறை அமைச்சரை பார்க்க செல்வது தவறா; ஏன் அலறுகின்றனர்; பதறுகின்றனர். ஏனென்றால் தி.மு.க.,வினர் ஊழல் அதிகளவில் செய்துள்ளனர். தி.மு.க., மக்களின் செல்வாக்கை இழந்து விட்டது. அதனால் பதறுகிறது. இந்த தேர்தலில் தோல்வி ஜூரம் தி.மு.க.,வை ஒட்டி கொண்டது.
சென்னை மேயர் பொம்மையாக உள்ளார்; தகுதியான, திறமையான மேயர் இல்லை. அவர்களை பயன்படுத்தி, தி.மு.க.,வினர் கொள்ளையடித்து வருகின்றனர். தி.மு.க., அரசு கழிப்பறையை கூட விட்டு வைக்காமல் ஊழல் செய்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
