ராயவரம்: ஆந்திராவில், சாலை விபத்தில் சிக்கிய டிப்பர் லாரியும், பஸ்சும் தீப்பிடித்து எரிந்ததில் 13 பேர்

ராயவரம்: ஆந்திராவில், சாலை விபத்தில் சிக்கிய டிப்பர் லாரியும், பஸ்சும் தீப்பிடித்து எரிந்ததில் 13 பேர் பலியாகினர்.

தெலுங்கானாவின் ஜக்தியால் பகுதியில் இருந்து ஆந்திராவின் நெல்லுார் மாவட்டத்தில் உள்ள காளிகிரிக்கு, தனியார் பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு, 35 பயணியருடன் புறப்பட்டது.

தீ விபத்து இந்த பஸ், நேற்று அதிகாலை 5:30 மணிக்கு, ஆந்திராவின் மார்க்க புரம் மாவட்டத்தில் உள்ள ராயவரம் அருகே வந்தது.

அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரே கருங்கல் ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில், பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. இந்த கோர விபத்தில், டிப்பர் லாரியின் டீசல் டேங்க் உடைந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

லாரி மற்றும் பஸ் தீப்பற்றி எரிந்ததை அடுத்து, பஸ்சில் இருந்த பயணியர் சிலர் ஜன்னல்களை உடைத்துக் கொண்டு வெளியே குதித்தனர்.

துாங்கிக் கொண்டிருந்த பயணியர் சிலர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரப் போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் இறந்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

காயமடைந்த 20க்கும் மேற்பட்டோருக்கு, மார்க்கபுரம் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இறந்தவர்களின் உடல்கள் கருகியுள்ளதால், அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உடல்களை மரபணு பரிசோதனை வாயிலாக அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இறந்தவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இரு மாநில அரசும் இணைந்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

இரங்கல் விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

‘விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்’ என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோரும் விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், பஸ்சில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Source link