ஆமதாபாத்: ”பரபரப்பான கட்டத்தில், 19வது ஓவரை வீச ஜோப்ரா ஆர்ச்சரை அழைத்தது, ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக்கின் சிறந்த முடிவு”, என, இர்பான் பதான் தெரிவித்தார்.
ஆமதாபாத்தில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி (210/6), 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை (204/8) வீழ்த்தியது. இப்போட்டியில் குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவரில், 15 ரன் தேவைப்பட்டது. அப்போது ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக், அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை பந்துவீச அழைத்தார். இந்த ஓவரை துல்லியமாக வீசிய ஆர்ச்சர், ஒரு விக்கெட் உட்பட 4 ரன் மட்டும் விட்டுக்கொடுத்தார். பின், கடைசி ஓவரில் அசத்திய துஷார் தேஷ்பாண்டே, ஒரு விக்கெட் உட்பட 4 ரன் மட்டும் வழங்கி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இதுகுறித்து முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் கூறியது: இப்போட்டியின் 19வது ஓவரில் ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் எடுத்த முடிவு துணிச்சலானது. இது, ராஜஸ்தான் அணிக்கு சாதகமாக அமைந்தது. கேப்டனாக அவருக்கு நம்பிக்கை அளித்திருக்கும். பொதுவாக, ஆட்டத்தின் கடைசிக்கு முந்தைய ஓவரை வீச அனுபவம் வாய்ந்த பவுலருக்கு வாய்ப்பு வழங்கப்படும். ரியான் பராக்கும், அனுபவ ஜோப்ரா ஆர்ச்சருக்கு வாய்ப்பு அளித்தார். தனது முழுத்திறமையை வெளிப்படுத்திய ஆர்ச்சர், எதிரணி பேட்டர்களுக்கு ரன் எடுக்கும் வாய்ப்பை வழங்கவில்லை. இது, கடைசி ஓவரை வீசிய தேஷ்பாண்டேவுக்கு கைகொடுத்தது. பதற்றமின்றி ‘யார்க்கர்’ வீசிய தேஷ்பாண்டே அணிக்கு வெற்றி தேடித்தந்தது பாராட்டுக்குரியது.
இவ்வாறு பதான் கூறினார்.
