ரிஷிவந்தியம்: ‘இன்னும் சில மாதங்களில் ரிஷிவந்தியம், சங்கராபுரம் எம்.எல்.ஏ.,க்கள் இருவரும் ஜெயிலுக்கு போவார்கள்’ என பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், பகண்டை கூட்ரோட்டில் ரிஷிவந்தியம் தொகுதி பா.ம.க., வேட்பாளர் செழியனை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில், அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால், சிறிய குழந்தைகளை சிதைத்து கொலை செய்யும் தி.மு.க., ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்பது பா.ம.க.,வின் 20 ஆண்டு கால கோரிக்கை, இதை நிறைவேற்றியது முன்னாள் அ.தி.மு.க., முதல்வர் பழனிசாமி. மாவட்டத்தை பிரித்தும் கள்ளக்குறிச்சிக்கு விடிவு வரவில்லை.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இதில், 63 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். இது கள்ளச்சாராய சாவு கிடையாது. படுகொலை. ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் சேர்ந்து கொலை செய்து விட்டனர். இதை தட்டிக்கேட்ட என் மீது அவதுாறு வழக்கு போடுவேன் என மிரட்டினர். உடன், இச்சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதன்பேரில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தற்போது விசாரணை நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் இரண்டு எம்.எல்.ஏ.,க்களும் ஜெயிலுக்கு போவார்கள்.
இத்தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் கிடையாது. தமிழ்நாட்டில் தி.மு.க., வின் பதவி முடிந்து போய்விட்டது. மாநிலத்தில் உள்ள பெண்களை பாதுகாப்பது தான் முதல்வரின் வேலை. இது முடியவில்லையெனில் எதற்கு உங்களுக்கு ஆட்சி.கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய சாதனைகள் குறித்து பேசி ஓட்டு சேகரிக்காமல், 8,000 ரூபாய் கூப்பன் தருகிறோம் என ஸ்டாலின் கூறுகிறார். இந்த கூப்பனை பெற தி.மு.க., வினருக்கு 3,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும்.
கடந்த முறை முதல்வராக இருந்த போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டையும், வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 இட ஒதுக்கீட்டையும் கொண்டு வந்தார். அதை முதல்வர் ஸ்டாலின் கெடுத்து விட்டார். இதை மறக்கவும், மன்னிக்கவும் கூடாது.தமிழ்நாடு முழுவதும் ஆட்சி மாற்றம் வேண்டும். தி.மு.க., வேண்டாம் என மக்கள் முடிவு செய்து விட்டனர். இவ்வாறு அன்புமணி பேசினார்.
