முதல்வர் விஜய் மற்றும் அவரது அமைச்சர்களை ஜெயிலர் இரண்டாம் பாகம் படத்தில் வரும் மூர்த்தி அண்ணன் கேங் என விமர்சித்து, பாஜக சார்பில் ஏஐ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு முதல்வர் விஜய் மற்றும் தவெக அமைச்சர்கள் , எம்எல்ஏ-களை சமீபத்தில் வைரலாகி வரும் ஜெயிலர் படத்தின் மூர்த்தி அண்ணன் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு, தமிழ்நாடு பாஜக சார்பில் ஒரு ட்ரோல் வீடியோ வெளியிட்டு, கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பழக்கடை மூர்த்தி அண்ணன்
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியது. வெளியான நாள் முதல் தற்போதுவரை நல்ல விமர்சனங்களைப் பெற்ற அந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்த நிலையில், ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் நடிகர் நமோ நாராயணன் நடித்த பழக்கடை மூர்த்தி அண்ணன் கதாபாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் அவர் தனக்கே ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
படத்தில் வில்லன்களில் ஒருவரான சூரஜ் வெஞ்சாரமூடு (திலீப்) உடன் செஸ் (சதுரங்கம்) விளையாடும் போது, யானை எடுத்தோமா, ராஜாவை அடிச்சமோ போயிட்டே இருக்கனும் எனும் அவர் சொல்லும் வசனமும். அதற்கு சுராஜ், அவன் எடுத்தது யானையும் இல்ல, அடிச்சது ராஜாவும் இல்ல, ஆனா எவ்ளோ கான்ஃபிடன்டா போறத பார்த்தியா என சொல்லும் வசனமும் தியேட்டர் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாஜக விமர்சனம்
இந்தச் சூழலில் அந்த சீனை (காட்சியை) அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு பாஜக சார்பில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளனர். அதில் முதல்வர் விஜய், அமைச்சர் ஆனந்த், அமைச்சர் மரியா வில்சன், அமைச்சர் பர்வேஸ், அமைச்சர் கீர்த்தனா மற்றும் எம்எல்ஏ பல்லவி ஆகியோர் பேசியதைக் குறிப்பிட்டு, சுராஜ் சொல்லும் வசனத்தை அவர்களுக்கு ஏற்றது போல மாற்றி அமைத்து ட்ரோல் செய்துள்ளனர்.
கான்ஃபிடன்டாக முட்டை தோசைக்கு ரிவ்யூ
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. அப்போது அமைச்சர் ஆனந்த் மற்றும் அமைச்சர் மரியா வில்சன் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அமைச்சர் ஆனந்த் மழையால் முறிந்து விழுந்த மரத்தை இயந்திரத்தால் வெட்டி அகற்றினார். மேலும் அமைச்சர் மரியா வில்சன் ஆய்வுக்குச் சென்று, அங்குள்ள ரோட்டுக் கடையில் உணவு சாப்பிட்டு, பின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தோசை சூப்பர் என பேட்டி அளித்தார். இதனைக் குறிப்பிட்ட பாஜக, இவங்களுக்கு மரம் அறுக்கவும் தெரியல, மழை நீரை அப்புறப்படுத்தவும் தெரியல, ஆனா எவ்ளோ கான்ஃபிடன்டா முட்டை தோசைக்கு ரிவ்யூ கொடுத்துட்டு போறாங்க பாரு என சுராஜ் பாணியில் விமர்சித்துள்ளனர்.
கான்ஃபிடன்டாக எஸ்கேப் ஆகும் முதல்வர்
ஒரு குற்றம் நடைபெற்ற பிறகு அதற்கான பொறுப்பை அரசு மீது சுமத்தி மற்றவர்கள் ஒதுங்கிவிட முடியாது என சட்ட ஒழுங்கு குறித்து சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். இதனை வீடியோவில் குறிப்பிட்டு, இவருக்கு சட்ட ஒழுங்கைக் கட்டுப்படுத்தி பாதுகாக்கத் தெரியல, இவர்தான் முதல்வர் என்றும் ஞாபகத்துல இல்ல, ஆனா எவ்ளோ கான்ஃபிடன்டாக எஸ்கேப் ஆகிறாரு பாரேன் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
வைரலாகும் பாஜக வீடியோக்கள்
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து பாஜக சார்பில் பல விமர்சனங்கள் மற்றும் ட்ரோல் வீடியோக்கள் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) உதவியுடன் உருவாக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. மேலும் இந்த ட்ரோல் வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் இதற்கென ஒரு கூட்டமும் இப்போது உருவாகியுள்ளது.
Source link
