லாகோஸ்: பெண்கள் ‘டி-20’ல் 15 வயதில், அறிமுக போட்டியில் சதம் என இரட்டை சாதனை படைத்தார் ருவாண்டா வீராங்கனை பேனி உடகுஷிமனின்தே.
நைஜீரியாவில் பெண்களுக்கான ‘இன்விடேஷனல்’ சர்வதேச ‘டி-20’ தொடர் நடக்கிறது. ருவாண்டா, நைஜீரியா, கானா அணிகளுடன், 19 வயதுக்குட்பட்ட தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கின்றன. லாகோசில் நடந்த இத்தொடரின் முதல் போட்டியில் ருவாண்டா, கானா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ருவாண்டா பேட்டிங் செய்தது. ருவாண்டா அணிக்காக 15 ஆண்டு, 223 வது நாளில் அறிமுக வாய்ப்பு பெற்றார் பேனி உடகுஷிமனின்தே.
பேனி சதம்
ருவாண்டா அணிக்கு பேனி, இஷிம்வே (14) ஜோடி துவக்கம் தந்தது. கேப்டன் மரியே (10), கிளாரிசே (15) நிலைக்கவில்லை. மறுபக்கம் பேனி, சதம் விளாசினார். பெண்கள் ‘டி-20’ல் அறிமுக போட்டியில், குறைந்த வயதில் சதம் அடித்த முதல் வீராங்கனை ஆனார்.
ருவாண்டா அணி 20 ஓவரில் 210/3 ரன் குவித்தது. பேனி (111 ரன், 65 பந்து), மெர்வெய்லே (32) அவுட்டாகாமல் இருந்தனர்.
அடுத்து களமிறங்கிய கானா அணிக்கு சலியா (14), அன்னோர் (11), ரெபெக்கா (10) ஆறுதல் தர, கேட் அவுவா அதிகபட்சம் 31 ரன் எடுத்தார். கானா அணி 20 ஓவரில் 88/8 ரன் மட்டும் எடுத்தது. ருவாண்டா 122 ரன்னில் வெற்றி பெற்றது.
அசத்தல் அறிமுகம்
சர்வதேச ‘டி-20’ அறிமுக போட்டியில் சதம் அடித்த முதல் வீராங்கனை ஆனார் உடகுஷிமனின்தே. முன்னதாக ஆஸ்திரேலியாவின் கரேன் ரோல்டன், 96 ரன் (2005, எதிர்-இங்கிலாந்து), எடுத்ததே அதிகம்.
* ஒட்டுமொத்த சர்வதேச ‘டி-20’ல் குறைந்த வயதில் சதம் அடித்தவர் ஆனார் உடகுஷிமனின்தே (15 ஆண்டு, 223 நாள்). இதற்கு முன் 2019ல் உகாண்டா வீராங்கனை புரோஸ்கோவியா அலாகோ, 16 ஆண்டு, 233 வது நாளில் சதம் (116 ரன், எதிர்-மாலி) அடித்து இருந்ததே அதிகம். ஆண்கள் சர்வதேச ‘டி-20’ல் 18 ஆண்டு, 280வது நாளில் சதம் அடித்த பிரான்சின் கஸ்தவ் மேக்கியான் (106 ரன், எதிர்-சுவிட்சர்லாந்து) முதலிடத்தில் உள்ளார்.
* ஆண்கள் சர்வதேச ‘டி-20’ல் ஐ.சி.சி., முழு அந்தஸ்து பெற்ற அணி வீரர்கள் யாரும் அறிமுக போட்டியில் சதம் அடிக்கவில்லை. உறுப்பு நாடுகள் அந்தஸ்து பெற்ற அணிகளின் 4 வீரர்கள் ‘அறிமுக’ சதம் விளாசியுள்ளனர். இதில் கனடாவின் ஸ்பூர்ஸ் (108, எதிர்-பிலிப்பைன்ஸ், 2022), முதலிடத்தில் உள்ளார்.
செர்பியாவின் தன்பர் (104, பல்கேரியா, 2019), நமீபியாவின் கோட்ஜே (101, போஸ்ட்வானா, 2019), கனடாவின் ரவிந்தர்பால் சிங் (101, கேமான், 2019) அடுத்த 3 இடத்தில் உள்ளனர்.
