புதுடில்லி: மேற்காசிய போர் பதற்றத்தால், கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய வேளாண் பொருள்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என, சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கை:
இந்தியாவுக்கு அருகாமையில் இருப்பதாலும், அதிக அளவிலான இந்தியர்கள் வசித்து வருவதாலும், பாரம்பரியமாகவே மேற்கு ஆசிய நாடுகள் முக்கிய சந்தையாக விளங்கி வருகின்றன.
ஆனால், தற்போது அங்கு நடைபெற்று வரும் போரால், கடல் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதோடு, காப்பீட்டு செலவுகள் அதிகரித்து, சரக்கு போக்குவரத்தில் நிச்சயமற்ற தன்மை உருவாகி உள்ளது.
கடந்தாண்டு மேற்கு ஆசிய நாடுகளுக்கு 1.09 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இது நாட்டின் மொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 22 சதவீதமாகும். போர் காரணமாக, நடப்பாண்டு இந்த ஏற்றுமதி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரிசி, தானியங்கள், பழங்கள், காய்கறிகள், நறுமண பொருட்கள், இறைச்சி, பால் மற்றும் பால் பொருட்கள், பானங்களின் ஏற்றுமதி பாதிக்கப்படக் கூடும்.
குறிப்பாக அரிசி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கடந்தாண்டு மேற்கு ஆசிய நாடுகளுக்கு 40,700 கோடி ரூபாய்க்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் அரிசி ஏற்றுமதியில் இது 36 சதவீதம்.
போர் காரணமாக இந்த சந்தைக்கான ஏற்றுமதியில் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. இது நேரடியாக விவசாயிகளையும், உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோரையும் பாதிக்கக்கூடும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.
