ரூ.1.50 கோடி அபராதம்; விஜய் மேல் முறையீடு!

நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய், கடந்த 2016 – 2017ஆம் ஆண்டு நிதி ஆண்டிற்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்திருந்தார். அதில் அந்த ஆண்டிற்கான வருமானமாக சுமார் 36 கோடி ரூபாய் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இது தொடர்பாக 2016 – 2017ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதோடு வருமானவரித் துறையினர் நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடத்தியிருந்தனர்.

அப்போது அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்த்தனர். அதில் அவர் நடித்த ‘புலி’ திரைப்படத்திற்குப் பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தில் கணக்கில் காட்டவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து வருமானத்தை மறைத்ததற்காக 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துக் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடுத்தார். இது விசாரணைக்கு வந்த போது, அபராதம் விதித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை என வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

அப்போது மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அனுமதியளித்தது. அதே சமயம் அபராதம் விதித்த உத்தரவு தாமதமாக பிறப்பிக்கப்பட்டது என்ற காரணத்தின் அடிப்படையில் மேல் முறையீடு செய்யக் கூடாது எனக் கூறியிருந்தது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், ‘தனது தரப்பு கருத்தை தனி நீதிபதி கவனத்தில் கொள்ள தவறிவிட்டார். வருமான வரித்துறை அதிகாரிகள் 2015ஆம் ஆண்டு சோதனையில் வந்த வருமானத்தை அதன் பிறகு வருமானம் வந்ததாக அபராதம் விதித்துள்ளனர். அதனால் இந்த நடவடிக்கை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link