ரூ.100 கோடி பழனி மட நில மோசடி விவகாரம்: மேலும் ஒருவர் கைது – சிபிசிஐடி அதிரடி – rs 100 crore palani mutt land scam another arrest as cbcid intensifies probe

பழனி அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் மருத்துவ பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

போலி ஆவணங்கள் மூலம் ரூ.100 கோடி நில மோசடி

பழனி அடிவாரம் சன்னதி வீதியில் உள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் வெறும் ரூ.2 கோடிக்கு பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட வழக்கு

பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், டிரஸ்ட் நிர்வாகி முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளைத்துரை மற்றும் சேதுபதி உள்ளிட்டோர் மீது கூட்டுச்சதி மற்றும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், கடந்த 15-ஆம் தேதி இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, சிபிசிஐடி எஸ்பி ஷாஜிதா மற்றும் டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் திண்டுக்கல் மற்றும் பழனியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, ஓய்வு பெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி சின்னச்சாமி, அறநிலைத்துறை ஆய்வாளர் சிவனேசன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

வாரிசுதாரர்களிடம் விசாரணை

இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, 1880-ஆம் ஆண்டின் நில உரிமையாளராகக் கூறப்படும் குப்புசாமி மணியகாரரின் வாரிசுதாரர்களான சுந்தரி, விஷ்ணு சுதர்சன் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி, தங்களிடம் இருந்த அசல் பத்திரங்கள் மற்றும் நில ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விளக்கம் அளித்தனர். அவர்களிடமும் விரிவான விசாரணை நடத்தப்பட்டது.

4 பேர் கைது; மேலும் கைது நடவடிக்கை

விசாரணையின் அடிப்படையில், போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்ததாகக் கூறப்படும் முருகதாஸ் (56), நிலத்தை வாங்கிய வெள்ளைத்துரை (60),சேதுபதிமற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் வழக்கறிஞர் அன்வர்தீன் (65) ஆகிய நான்கு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் மீது BNS சட்டப்பிரிவுகள் 318(4), 336(3), 340(2), 49 மற்றும் 61(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரும் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

மேலும் பலர் விசாரணை வளையத்தில்

இந்த நில மோசடி வழக்கில் தொடர்புடைய மேலும் பலரை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை முன்னேறி வரும் நிலையில், இந்த வழக்கில் மேலும் முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link