ரூ.1000-க்கு மேல் மது வாங்கினால் யுபிஐ, கார்டு மட்டுமே! டாஸ்மாக் நிர்வாகத்தின் சுற்றறிக்கை – tasmac mandates online payment for purchases above rs 1000 from november 1

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) சில்லறை விற்பனைக் கடைகளில் ரொக்கமில்லா மின்னணு பணப்பரிவர்த்தனையை (Cashless Digital Transactions) படிப்படியாகக் கட்டாயமாக்கி டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் க. நந்தகுமார், இ.ஆ.ப., அதிரடி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் தற்போது செயல்பட்டு வரும் 4,048 கடைகளிலும் இந்த புதிய விதிகள் படிப்படியாக அமலுக்கு வருகின்றன.

ஏன் இந்த அதிரடி மாற்றம்?

டாஸ்மாக் கடைகளில் விற்பனைத் தொகையின் பெரும் பகுதி ரொக்கமாகவே பெறப்படுவதால் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுவதாக அரசு சுட்டிக்காட்டியுள்ளது. தினசரி வசூலாகும் லட்சக்கணக்கான ரூபாயைக் கடைகளில் பாதுகாப்பாக வைப்பதில் பணியாளர்களுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. பணத்தை வங்கியில் செலுத்த தினமும் ஊழியர்கள் அலைய வேண்டியுள்ளதால் பணிச்சுமை கூடுகிறது. ரொக்கப் பரிவர்த்தனைகளால் கள்ள நோட்டுப் புழக்கம், கணக்கு வேறுபாடுகள் மற்றும் பணப் பற்றாக்குறை போன்ற புகார்கள் எழுகின்றன. மிக முக்கியமாக, மதுபானங்களை அதிகபட்ச சில்லறை விலைக்கு (MRP) மேல் கூடுதல் தொகைக்கு விற்பதாகப் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ரொக்கமாகப் பணம் செலுத்தப்பட்டதால் இதற்கு முறையான சான்றுகள் இல்லாமல் விசாரணை நடத்துவது கடினமாக இருந்தது.மின்னணு முறையில் பணம் பெறப்படும்போது ஒவ்வொரு பரிவர்த்தனையின் தொகையும், நேரமும் கணினியில் பதிவாகிவிடுவதால், இனி ‘எம்.ஆர்.பி’ விலையை விடக் கூடுதலாக ஒரு பைசா கூட வசூலிக்க முடியாது. இது விற்பனையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதுடன் ஊழியர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

புதிய கட்டுப்பாடுகள் எப்போது முதல் அமல்?

நுகர்வோரின் வாங்கும் மதிப்பின் அடிப்படையில் டிஜிட்டல் கட்டண முறை இரண்டு கட்டங்களாகக் கட்டாயமாக்கப்பட உள்ளது: நவம்பர் 01, 2026 முதல்: ஒரே நேரத்தில் ஒரு நுகர்வோர் வாங்கும் மதுபானங்களின் மொத்த மதிப்பு ரூ.1,000-க்கு மேல் இருந்தால், அதற்கு ரொக்கமாகப் பணம் செலுத்த முடியாது. யுபிஐ (UPI), கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். ஜனவரி 01, 2027 முதல்: இந்த வரம்பு மேலும் குறைக்கப்பட்டு, ரூ.500-க்கு மேல் மது வாங்குபவர்கள் அனைவரும் கட்டாயம் டிஜிட்டல் முறையிலேயே பணம் செலுத்த வேண்டும்.குறிப்பிடப்பட்ட இந்த வரம்புகளுக்குக் கீழ் (ரூ.1,000 மற்றும் ரூ.500-க்குக் குறைவாக) மது வாங்குபவர்கள் தங்களின் விருப்பப்படி ரொக்கமாகவோ அல்லது கார்டு, யுபிஐ மூலமாகவோ பணம் செலுத்திக் கொள்ளலாம்.

அதிகாரிகளுக்குப் பறந்த உத்தரவு

இந்த புதிய டிஜிட்டல் கட்டண முறையைச் செம்மையாகச் செயல்படுத்த அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கடைகளிலும் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட, நல்ல நிலையில் செயல்படும் போஸ் (POS) இயந்திரங்கள் நவம்பர் 1-ஆம் தேதிக்கு முன்னதாகவே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பழுதான இயந்திரங்களை உடனடியாக மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட இந்த கார்டு மிஷின்களைத் தவிர வேறு எந்த முறையிலாவது டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொண்டால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், நுகர்வோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் 2 அடிக்கு 3 அடி அளவிலான பெரிய அறிவிப்புப் பலகைகளை (Banners) அனைத்துக் கடைகளின் முன்பும் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஆன்லைன் முன்பதிவு முறையைத் தொடங்கிய டாஸ்மாக் நிர்வாகம், தற்போது கடைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையைக் கட்டாயமாக்கியிருப்பது கள்ளச்சந்தை விற்பனை மற்றும் கூடுதல் விலை வசூலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link