ரூ.1000 லஞ்சம் கேட்ட கிராம அலுவலருக்கு 2 ஆண்டு சிறை; நீதிமன்றம் அதிரடி!

விவசாய நிலத்திற்கு நிலஉரிமை சான்றிதழ், நான்கெல்லை சான்று, அடங்கல் மற்றும் நிலத்தின் வரைபடம் ஆகியவை வழங்க ரூ.1,000 லஞ்சம் கேட்டுப்பெற்ற வழக்கில் முன்னாள் கிராம அலுவலருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, வடமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த வெள்ளையா பிள்ளை என்பவரது மகன் செல்வராஜ். இவர், வடமலைப்பட்டி கிராமத்தில் உள்ள தன்னுடைய விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெற தாத்தையங்கார்பேட்டையில் உள்ள மின்சார வாரியத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த சூழ்நிலையில் அந்த விவசாய நிலத்திற்கு உண்டான நிலஉரிமை சான்றிதழ், நான்கெல்லை சான்று, அடங்கல் மற்றும் நிலத்தின் வரைபடம் ஆகியவைகளை கேட்டு, மின்சார வாரியத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது செல்வராஜ் இலங்கையில் இருந்ததால், அவரது சகோதரர் விஸ்வநாதன் என்பவரிடம் மேற்படி நில உரிமை சான்றிதழ், நான்கெல்லை சான்று, அடங்கல் மற்றும் நிலத்தின் வரைபடம் ஆகியவைகளை பெற்று தரும்படி கேட்டுள்ளார்.

அதன்படி விஸ்வநாதன் ஆவணங்களை பெற திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, மோருப்பட்டி கிராமம், (பொறுப்பு) வடமலைப்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த ஜெகநாதன் என்பவரை கடந்த 10.1.2011ஆம் ஆண்டு காலை சுமார் 09.00 மனிக்கு அணுகியுள்ளார். அப்போது ஜெகநாதன், செல்வராஜ் பெயரில் உள்ள விவசாய நிலத்திற்கு நிலஉரிமை சான்றிதழ், நான்கெல்லை சான்று, அடங்கல் மற்றும் நிலத்தின் வரைபடம் தர ரூ.1,000 லஞ்சமாக கேட்டுள்ளார். அதனால் விஸ்வநாதன் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கடந்த 11.01.2011ஆம் தேதி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து 12.01.2011.ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையில், விஸ்வநாதனிடம் இருந்து லஞ்சப்பணம் ரூ.1,000 த்தை கேட்டு பெற்ற போது ஜெகநாதன், திருச்சி வஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று 30.03.2026ஆம் தேதி விசாரணை முடிவுற்று, திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு, லஞ்சப்பணம் கேட்ட குற்றத்திற்காக ஜெகநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ5,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், மேற்கண்ட சிறை தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் டிஎஸ்பி மணிகண்டன், காவல் ஆய்வாளர் அ.பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்தும், அரசு தரப்பு வழக்கறிஞர் கோபிகண்ணன் வழக்கை திறம்பட நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்துள்ளார்கள்.

Source link