ரூ.10,000 லஞ்சம் கேட்டு நச்சரிப்பு :மின்வாரிய ஊழியருக்கு 'காப்பு'

மதுரை : காலி இடத்திற்கு மேலே செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகளை மாற்றி அமைக்க, 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டு, நச்சரித்து பெற்ற, மின் வாரிய ஊழியர் கைதானார்.

மதுரை மாடக்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சரவணகுமார், 45; கொத்தனார். இவருக்கு, மதுரை விளாச்சேரி ரோட்டில், 4 சென்ட் இடம் உள்ளது. அதன் மேலே உயர் மின்னழுத்த கம்பிகள் செல்கின்றன. இதை மாற்றி அமைக்க திருநகரில் உள்ள பசுமலை மின் வாரிய அலுவலகத்தில், ஒரு மாதத்திற்கு முன் விண்ணப்பித்தார். இடத்தை ஆய்வு செய்த இளநிலை மின் உதவியாளர் திருப்பதி, 59, மின்னழுத்த கம்பிகளை மாற்றி அமைக்க, மின்வாரியத்திற்கு, 2.96 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கான பணிகளை மேற்கொள்ள, தனக்கு, 10,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், ஒரு மாதமாக ‘என்னாச்சு’ என, கேட்டு நச்சரித்துள்ளார். இந்நிலையில், வங்கி வாயிலாக, 2.96 லட்சம் ரூபாயை மின்வாரியத்திற்கு, சரவணகுமார் செலுத்தியதை அறிந்த திருப்பதி, போனில் தொடர்பு கொண்டு மறுபடியும் லஞ்சம் கேட்டார்.

இதுகுறித்து, சரவணகுமார், லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சத்தியசீலனிடம் புகார் செய்தார். நேற்று மாலை பசுமலை மின் அலுவலகத்தில், சரவணகுமாரிடம், 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, திருப்பதியை போலீசார் கைது செய்தனர்.

Source link