லக்னோ:உத்தர பிரதேசம், 20,300 கோடி ரூபாய் மதிப்புள்ள அன்னிய மற்றும் மூலதன முதலீட்டை ஈர்த்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
உ.பி., அரசு மேலும் தெரிவித்துள்ளதாவது:
உ.பி., அரசு 2023ல் முதலீட்டு ஊக்குவிப்பு கொள்கையை கொண்டு வந்தது. இந்த கொள்கை 2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இலக்காக கொண்டு முதலீடுகளை ஈர்க்க களத்தில் இறங்கியது. இதன் வாயிலாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தொழில் துவங்க அழைப்பு விடுக்கப்பட்டது.
மொத்தம் 21 திட்ட முன்மொழிவுகள் வாயிலாக, 12,500 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. மீதி 7,800 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்ட வரைவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளது.
தொழில்துறைக்கான அனுமதியை எளிமைப்படுத்துதல், தொழிலுக்கான திட்டங்களை வடிவமைத்தல் என, சமீபத்தில் மேற்கொண்ட சீர்த்திருத்தங்களால் தொழில் முதலீட்டுக்கான முன்மொழிவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
எலக்ட்ரானிக் பொருட்கள், செமி கண்டக்டர் தயாரிப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் தரவு மையங்களை துவங்க, பெரும்பான்மையான நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.
