ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கைது

சென்னை: வியாபாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் இருவரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

தமிழகத்தில், ஜி.எஸ்.டி., ராணிப்பேட்டை சரக அலுவலக கண்காணிப்பாளர் எல்லமல்லி ரிங்கேஷ்; இன்ஸ்பெக்டர் ராம்கேஷ் மீனா ஆகியோர், ஜி.எஸ்.டி., பதிவை அங்கீகாரம் செய்ய, வியாபாரி ஒருவரிடம், 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.

இது குறித்து, சென்னை சி.பி.ஐ., அதிகாரிகளிடம், அந்த வியாபாரி புகார் அளித்தார்.

இதையடுத்து, புகார் அளித்த வியாபாரியிடம் இருந்து, கண்காணிப்பாளர், 15,000 ரூபாய் லஞ்சமாக வாங்கியபோது, அவரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், ராணிப்பேட்டை ஜி.எஸ்.டி., இன்ஸ்பெக்டருக்கும், தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரது அறையை சோதனை செய்தபோது, லஞ்சப் பணம், 15,000 ரூபாயை கழிப்பறையில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

அந்த பணத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் பறிமுதல் செய்து, இன்ஸ்பெக்டரை கைது செய்தனர்.

Source link