ரூ.3,600 கோடி ஹெலிகாப்டர் பேர ஊழல்: பிரிட்டன் இடைத்தரகரை விடுவிக்க மறுப்பு

புதுடில்லி: ‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட்’ ஹெலிகாப்டர் பேர ஊழலில் கைதான இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ், ஜாமினில் விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

ஒப்பந்தம் மத்தியில், 2010ல், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது ஜனாதிபதி, பிரதமர் உட்பட வி.வி.ஐ.பி.,க்கள் பயணிக்க வசதியாக, ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்த, ‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட்’ நிறுவனத்திடம் இருந்து, 3,600 கோடி ரூபாய் மதிப்பில், 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் 423 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக 2013ல் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து பலரை கைது செய்தனர்.

கடந்த, 2014ல் மத்தியில் பா.ஜ., தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்ததும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இந்த முறைகேடு தொடர்பாக, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் சார்பில் இடைத்தரகராக செயல்பட்ட பிரிட்டனை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் மீதும், சி.பி.ஐ., தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

தள்ளுபடி இதை தொடர்ந்து, மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியால், 2018, டிசம்பரில், துபாயில் தங்கியிருந்த ஜேம்ஸ், நாடு கடத்தப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்த இரு வழக்கிலும் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.

எனினும் நிபந்தனைகளை முழுதாக பூர்த்தி செய்யாததாலும், 15 லட்சம் ரூபாய் பிணைத் தொகையை செலுத்த தவறியதாலும், தொடர்ந்து சிறையிலேயே இருக்க நேரிட்டது.

இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்றத்தில் ஜேம்ஸ் தரப்பில் ஜாமினில் விடுவிக்கக் கோரி மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ரவீந்த் துடேஜா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜேம்ஸ் தரப்பில் முன்வைத்த வாதங்களை நிராகரித்த நீதிபதிகள், அவரை ஜாமினில் விடுவிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Source link