மும்பை:வங்கிகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், ஓ.எம்.ஓ., எனப்படும் திறந்த சந்தை நடவடிக்கை வாயிலாக 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு கடன் பத்திரங்களை வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி நேற்று வாங்கியுள்ளது.
இது குறித்து அவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தை சீர்படுத்த, அரசு பத்திரங்களை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பல்வேறு முதிர்வு காலங்களைக் கொண்ட அரசு பத்திரங்களை வாங்கி, அதன் வாயிலாக சந்தையில் 50,000 கோடி ரூபாய் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, வங்கி அமைப்புக்குள் பணப்புழக்கம் கிட்டத்தட்ட 3.02 லட்சம் கோடி ரூபாய் உபரியாக உள்ளது. இருந்தாலும், இந்த மாத இறுதியில், முன்கூட்டிய வரி மற்றும் ஜி.எஸ்.டி., செலுத்துவதற்கான காலக்கெடு வருகிறது.
இதனால் வங்கிகளில் இருந்து பெருமளவு பணம் வெளியேற வாய்ப்புள்ளது. எனவே, பணத்தட்டுப்பாடு ஏற்படுவதை முன்கூட்டியே தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கி, 6,309 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு பத்திரங்களை திரும்ப பெற்று, அதற்கு பதிலாக 6,431 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பத்திரங்களை ‘சுவிட்ச்’ ஏலம் வாயிலாக நேற்று வெளியிட்டது.
