ரோகித் சர்மா 2.0: கும்ளே பாராட்டு

மும்பை: வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மும்பை அணி, கொல்கட்டாவை வீழ்த்தியது. மும்பை அணிக்கு அதிரடி துவக்கம் தந்த அனுபவ ரோகித் சர்மா, 38, அரைசதம் கடந்தார். 38 பந்தில் 78 ரன் (6X6, 6X4) விளாசி, வெற்றிக்கு வித்திட்டார். 10 மாதங்களுக்கு பின் ‘டி-20’ போட்டியில் பங்கேற்ற இவர், அசராமல் சிக்சர் அடித்தார்.

இந்திய முன்னாள் கேப்டன் கும்ளே கூறுகையில்,”சிறிய ‘பிரேக்’ எடுத்து களமிறங்கும் வீரருக்கு இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 5-7 நாள் தேவைப்படலாம். ஆனால், முழு உடற்தகுதியுடன் இருந்த ரோகித் ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்தினார். இவரது இமாலய சிக்சர்கள், இளமை கால ரோகித்தை நினைவுபடுத்தியது. வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் பந்துகளில் எளிதாக சிக்சர் விளாசினார். இவரது 2.0 அவதாரம், எதிரணிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்,”என்றார்.

சூர்யா ‘கதை’ நிஜமா

கொல்கட்டாவுக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார், 8 பந்தில் 16 ரன் எடுத்தார். கடந்த முறை ரோகித் சர்மா போல இம்முறை இவரை ‘இம்பேக்ட்’ வீரராக களமிறக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறுகையில்,”சூர்யாவுக்கு இடுப்பு பகுதியில் லேசான பிடிப்பு ஏற்பட்டது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தான் ‘இம்பேக்ட்’ வீரராக களமிறக்கினோம். அணியின் முக்கிய வீரர் என்பதால் இந்த முடிவை எடுத்தோம். இதை வைத்து கற்பனை கதைகளை கிளப்பிவிடாதீர்கள். முன்பு முதல் போட்டியில் தோற்ற நிலையில், கொல்கட்டாவுக்கு எதிராக வென்றது மகிழ்ச்சி அளித்தது,”என்றார்.

ரஹானே வியூகம் சரியா

மும்பை அணியின் ரோகித் சர்மா, ரிக்கிள்டன் துவக்கத்தில் அதிரடியாக ரன் சேர்த்த சமயத்தில், கொல்கட்டா கேப்டன் ரஹானே வியூகம் எடுபடவில்லை.

இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் கூறுகையில்,”மும்பை அணி ‘பவர்பிளே’யில் (முதல் 6 ஓவர்) 80/0 ரன் எடுத்தது. ‘சுழல் மாயாவி’ சுனில் நரைனுக்கு ‘பவர்பிளே’யில் ஒன்று அல்லது 2 ஓவர் கொடுத்திருக்க வேண்டும். இதை செய்ய தவறினர். நரைன் 3 ஓவர் தான் வீசினார். இது ரஹானேவின் பலவீனமான கேப்டன்சியை சுட்டிக்காட்டியது,”என்றார்.

இங்கேயே இருங்க ஷர்துல்

கொல்கட்டா அணியை தனது ‘வேகத்தில்’ திணறடித்த மும்பை அணியின் ஷர்துல் தாகூர், 3 விக்கெட் வீழ்த்தி, ஆட்டநாயகன் விருது வென்றார்.

மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில்,”ஷர்துல் சிறப்பாக பந்துவீசினார். இவரிடம் ‘அணி மாறியது எல்லாம் போதும்; எஞ்சிய கிரிக்கெட் வாழ்க்கையில் இங்கேயே இருங்க. எங்கேயும் போகாதீங்க,’ என்றேன். இவரது செயல்பாட்டை நினைத்து பெருமைப்படுகிறேன்,”என்றார்.

Source link