லக்னோ: 'ஒவ்வொரு முட்டை மீதும் உற்பத்தி மற்றும் காலாவதி தேதியை கட்டாயம் குறிப்பிட வேண்டும்' என, உத்தர பிரதேச

லக்னோ: ‘ஒவ்வொரு முட்டை மீதும் உற்பத்தி மற்றும் காலாவதி தேதியை கட்டாயம் குறிப்பிட வேண்டும்’ என, உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டு உள்ளது.

உ.பி.,யில் கடைகள் மற்றும் ‘ஆன்லைன்’ மூலம் வாங்கிய முட்டைகள் அழுகி இருப்பதாக சமூக வலைதளங்களில் புகார்கள் குவிந்தன. இதற்கு, முறையான சோதனைகளை உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரிகள் நடத்தாததே காரணம் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, முட்டை மீது காலாவதி தேதியை முத்திரையிடு வதை, வரும் ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

முட்டை வாங்கும் நுகர்வோருக்கு உதவும் வகையிலும், நாம் வாங்கும் முட்டை புதியது தானா என்பதை உறுதிபடுத்தவும், புதிய நடைமுறை ஏப்., 1 முதல் அமலாகிறது. அதன்படி அனைத்து முட்டைகள் மீதும், கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் முட்டை உற்பத்தி செய்த நாள், காலாவதியாகும் நாள் ஆகியவற்றை குறிப்பிடவேண்டும்.

அவ்வாறு குறிப்பிடாவிட்டால், முட்டை நுகர்வுக்கு உகந்ததல்ல என கருதி, அது நிராகரிக்கப்படும். உ.பி.,யின் ஆக்ரா மற்றும் ஜான்சியில் மட்டும் முட்டை சேமிப்பு மையங்கள் உள்ளன. 30 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் சேமித்து வைக்கப்படும் முட்டை, உற்பத்தி செய்யப்பட்ட நாளில் இருந்து 2 வாரங்களுக்கு பயன்படுத்த ஏற்றது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link