லக்னோ: மருமகளிடம், பராமரிப்பு தொகையை பெற்று தர வலியுறுத்தி, உயிரிழந்த போலீஸ்காரரின் வயதான பெற்றோர் தாக்கல் செய்த மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உத்தர பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கு, 2016ல் திருமணம் நடந்தது. இவர், 2021ல் உயிரிழந்தார். இவரது மனைவி, போலீசாக பணிபுரிகிறார்.
மகன் இறந்துவிட்டதால், மருமகளிடம் இருந்து தங்களுடைய வாழ்க்கைக்கான பராமரிப்பு தொகையை பெற்றுத் தரும்படி, உயிரிழந்த போலீஸ்காரரின் வயதான பெற்றோர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
கடந்தாண்டு ஆகஸ்டில், இதை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வயதான பெற்றோர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அதில், ‘அரசு பணியில் இருந்த எங்கள் மகனை சார்ந்தே வாழ்ந்து வந்தோம். மகன் இறந்து விட்டதால் வாழ்வாதாரம் இல்லை. எங்களின் மருமகளுக்கு சுய வருமானம் உள்ளது. அவருக்கு பணி சலுகைகளும் கிடைத்துள்ளன. எனவே அவரிடம் இருந்து பராமரிப்பு தொகையை பெற்று தர வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தனர்.
இதை சமீபத்தில் விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில், மாமனார் – மாமியாரை பராமரிப்பது மருமகளின் தார்மீக கடமை என்றும், சட்டப்பூர்வ கடமை என்றும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ஒருவர், தன்னை சார்ந்திருக்கும் மனைவி, குழந்தை மற்றும் பெற்றோருக்கு பராமரிப்பு தொகையை வழங்க, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா சட்டப் பிரிவு – 144 தெரிவிக்கிறது. இதில், மாமனார் – மாமியார் உறவுமுறை சேர்க்கப்படவில்லை.
இதன்படி, மாமனார் – மாமியாருக்கு பராமரிப்பு தொகை வழங்கும் பொறுப்பை மருமகள் மீது சுமத்துவது சட்டத்தின் பணியல்ல.
தார்மீக கடமையை, சட்டப்பூர்வ கடமையாக செய்ய கட்டாயப்படுத்த முடியாது.
அதே சமயம், மருமகளுக்கு அரசு பணியில் சலுகைகள் கிடைப்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, குடும்பநல நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
