லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, ‘லஞ்சம் – என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் ‘தினமலர்’ இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ:
பெயர் வெளியிட விரும்பாத வாசகர்:
நான் தற்போது கிருஷ்ணகிரியில் வசிக்கிறேன். முன்பு வாடகை வீட்டில் வசித்தவர்கள்; சிரமப்பட்ட குடும்பம். வெளிநாடு சென்று கஷ்டப்பட்டு சம்பாதித்து, சிறு, இடம் வாங்கியது முதல் வீடு கட்டி முடிக்கும் வரை லஞ்சமோ லஞ்சம் தான். பட்டா மாறுதல் செய்ய, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ரூ.3,500 லஞ்சம். பஞ்சாயத்துக்கு அனுமதிக்காக ரூ.20 ஆயிரம் லஞ்சம். மின் இணைப்புக்காக வி.ஏ.ஓ.,விடம் வரைபடம் வாங்கச் சென்றோம்; அங்கு ரூ.3,500.
கிருஷ்ணகிரி மின்வாரியத்துக்கு புதிய இணைப்புக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது, அங்கிருந்த அதிகாரி ரூ.5,000 வாங்கிக் கொண்டு, ஏரியா போர்மேனிடம் என் விண்ணப்பத்தைக் கொடுத்தார். ஒரு மாதத்தில் இணைப்பு வரும் என்றனர். நம்பி கட்டுமானப் பணியைத் தொடங்கினோம்; 45 நாளுக்குப் பிறகும் இணைப்பு வரவில்லை. கேட்டால், மின் சாதனங்கள் இருப்பு இல்லை. சீனியாரிட்டிபடிதான் தர முடியும் என அலைய வைத்தனர்.
போர்மேனுக்கு தனியாக பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் எனத் தெரிய வந்தது; அவருக்கும் ரூ.2,000 கொடுத்தேன். அடுத்த நாளே அனைத்துப் பொருட்களும் வந்தன. பொக்லைன் இயந்திரம் முதல் வந்த வேலை ஆட்கள் அனைவருக்கும் நான்தான் பணம் கொடுத்தேன். மீட்டர் பொருத்துவதற்கும் ரூ.1,000 லஞ்சம். வீடு கட்டி முடித்த பின்னர், வீட்டுக்கான இணைப்பாக மாற்றவும் ரூ.2,500 லஞ்சம். அத்தனை முறையும் பேரம் பேசித்தான் குறைத்தேன். மின் வாரியத்தில் சிலர் ரத்தம் உறிஞ்சும் மனசாட்சியற்ற மனிதர்களாக உலாவுகின்றனர்.
தொடரும்..
