'லாக்டவுன்' கிடையாது! வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்; மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் விளக்கம்

புதுடில்லி: “கொரோனா தொற்றின் போது அமல்படுத்தப்பட்டது போல், நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை” என, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக, அந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிலைகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

எதுவும் இல்லை

இதுதவிர, உலகளவில் 20 சதவீத எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் அரசு தடை விதித்தது. இதனால் உலகளவில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக, கொரோனா தொற்றின் போது அமல்படுத்தப் பட்டது போல், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்கும் என தகவல் பரவியது. இது வெறும் வதந்தி என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று வெளியிட்ட அறிக்கை: நம் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பரவும் தகவல் முற்றிலும் வதந்தி; பொய்யானவை. மத்திய அரசின் பரிசீலனையில் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை.

தயாராக உள்ளது தற்போதைய சூழலில், நாம் அமைதியாகவும் பொறுப்புணர்வுடனும் ஒற்றுமையுடனும் இருப்பது மிகவும் முக்கியம்.

எரிசக்தி மற்றும் எரிபொருள் வினியோகம் தடையின்றி தொடர்வதை உறுதிசெய்ய மத்திய அரசு அ னைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதால், நம் நாட்டின் எரிசக்தி நிலைமை பாதுகாப்பாக உள்ளது. எழக்கூடிய சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், ‘லாக்டவுன்’ அமல்படுத்த வாய்ப்பே இல்லை என்பதை நேற்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

‘உரதட்டுப்பாடு இல்லை!’

“மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நீடித்தாலும் நம் நாட்டின் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கு எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை; அது போதுமான அளவு கையிருப்பு உள்ளதால் யாரும் அச்சப்பட தேவையில்லை” என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் லோக்சபாவில் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் மணீஷ் திவாரி எழுப்பிய துணை கேள்வியில், ‘மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நம் நாட்டில் உரத் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? கரீப் பருவத்திற்கு போதுமான உரங்கள் கையிருப்பில் உள்ளதா? உரங்களை இறக்குமதி செய்ய மாற்று சந்தைகளை மத்திய அரசு கண்டறிந்துள்ளதா?’ என, குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் நட்டா பதிலளித்து பேசுகையில், “விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்கள், நம்மிடம் போதுமான கையிருப்பு உள்ளது. இதுபற்றி, மாநில வேளாண் துறை அமைச்சர்களிடம் நேற்று பேசினேன். இதுகுறித்து யாரும் பதற்றமடைய தேவையில்லை. நாங்கள் புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்,” என்றார்.

Source link