லாஸ் ஏஞ்சலஸ்: திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு, ‘கிராமி’ விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இசையில் சிறந்து விளங்கும் இசைக் கலைஞர்களை கவுரவப்படுத்தும் வகையில், அமெரிக்காவில், கிராமி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 68வது கிராமி விருது விழா லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டது. ‘மெடிடேசன்ஸ்: தி ரிப்ௌக்சன்ஸ் ஆப் ஹிஸ் ஹோலினெஸ் தி தலாய் லாமா’ என்ற ஆன்மிக சொற்பொழிவுக்காக, ‘சிறந்த ஒலி வடிவ கதைச் சொல்லும் படைப்பு’ பிரிவில், அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இது, தலாய் லாமா பெறும் முதல் கிராமி விருது. அவரது சார்பாக, இசைக் கலைஞர் ரூபஸ் வைன்ரைட் விருதை பெற்றுக் கொண்டார்.
விருது குறித்து கருத்து தெரிவித்த தலாய் லாமா, ”இதை ஒரு தனிப்பட்ட சாதனையாக பார்க்கவில்லை. அமைதி, கருணை, மனிதநேயத்தின் ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கான அங்கீகாரமாகவே கருதுகிறேன். இந்த விருது உலகளாவிய பொறுப்பை அனைவருக்கும் நினைவூட்ட உதவும்,” என்றார்.
இதற்கிடையே, தலாய் லாமாவுக்கு விருது வழங்கியதற்கு நம் அண்டை நாடான சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளது.
இந்திய கலைஞர்களில் ஒருவருக்கு கூட கிராமி விருது கிடைக்கவில்லை. பாடகர்கள் அனுஷ்கா சங்கர், சித்தாந்த் பாட்டியா ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தும், ஒரு விருது கூட கிடைக்கவில்லை.
இது தவிர, புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், தன் முதல் கிராமி விருதை வென்றதன் மூலம், ‘எமி, கிராமி, ஆஸ்கர், டோனி’ ஆகிய நான்கு உயரிய விருதுகளையும் வென்ற சாதனையாளர் பட்டியலில் இணைந்தார்.
‘ரெக்கார்டு ஆப் தி இயர்’ என்ற விருதை வென்றதன் மூலம், 27 கிராமி விருதுகளுடன், அதிக கிராமிகளை வென்ற ராப் கலைஞர் என்ற பெருமையை கென்ட்ரிக் லாமர் பெற்றார்.
வரலாற்றிலேயே முதன்முறையாக ஸ்பானிஷ் மொழி ஆல்பத்திற்காக, ஆண்டின் சிறந்த ஆல்பம் விருதை ராப் பாடகர் பேட் பன்னி வென்றார்.
