மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடுகள் பட்டியல், வீட்டு வசதிகள் குறித்து கேட்கப்பட்டுள்ள கட்டத்தில் கேட்கப்படவுள்ள 33 கேள்விகளில், ஒரு வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கையும் ஒன்றாகும். இந்தக் கணக்கெடுப்புப் பணி 45 நாட்கள் நடக்க இருக்கிறது.
முதல் கட்டமான வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு அடுத்த மாதம் தொடங்கும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் அறிவிப்பின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடுகள் பட்டியல் பணிகள் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெறும்.
45 நாட்கள் நடக்கும் இக்கணக்கெடுப்பின் முதல் 15 நாட்கள் சுய விபர பதிவேற்றத்திற்காகவும், அதைத்தொடர்ந்து வரும் 30 நாட்களில் கணக்கெடுப்பாளர்கள் நேரில் வந்து விபரங்களைச் சேகரிப்பதாகவும் இருக்கும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, பதிலளிப்பவர்கள் தங்கள் பதில்களுக்கு எந்தவிதமான ஆவண ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களுக்குத் தெரிந்த உண்மையான தகவல்களைத் தெரிவித்தால் போதுமானது.

பதிலளிப்பவர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புது டெல்லி மாநகராட்சி பகுதிகளில் ஏப்ரல் 1-ஆம் தேதி சுய விபரப் பதிவேற்றம் தொடங்குகிறது. இதில் ஒரு பிரத்யேக இணையதளம் வாயிலாக பொதுமக்கள் தங்களைப் பற்றிய தகவல்களைத் தாங்களாகவே பதிவு செய்துகொள்ளலாம்.
இந்தச் சுய-விவரப் பதிவேற்ற வசதி, ஆங்கிலம் மற்றும் 15 இந்திய மொழிகளில் இருக்கும். குடும்பத் தலைவர் சுயவிபர தகவல்களைப் பதிவேற்றம் செய்யப்படலாம்.
குடும்பத் தலைவர் ஆண் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தவிர ஒடிபி அடிப்படையிலான மொபைல் சரிபார்ப்பை முடித்த பிறகு, குடும்பத்தைச் சேர்ந்த பொறுப்பான குடும்ப உறுப்பினர் எவரும் இதனைச் செய்யலாம்.
