‘லீடர்’ படத்தை சட்டவிரோதமாக வெளியிடத் தடை; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லீடர்’. இப்படம்,  இன்று  (03-04-26) முதல் உலகமெங்கும் 500 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இந்நிலையில், நடிகரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான லெஜெண்ட் சரவணன் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், “லீடர் எனும் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ளேன். 

இப்படத்தில், ஷாம் மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படம், இன்று முதல் உலகம் எங்கும் 500 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இந்த படத்தின் காப்புரிமை அனைத்தும் என்னிடம் தான் உள்ளது. பொதுவாக புதிய திரைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களில், அப்படம் சமூக வலைத்தளங்கள் அல்லது இணைய தளங்களில்  சட்ட விரோதமாக வெளியாகிவிடுகிறது. இதனால், படத் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.  

எனவே, நான் தயாரித்து, நடித்துள்ள லீடர் படத்தை வலைத்தளங்களில் சட்ட விரோதமாக வெளியிடத் தடை விதிக்க வேண்டும். குறிப்பிட்ட அந்த வலைத்தளங்கள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்துள்ளேன். லீடர் படத்தை இந்த வலைத்தளங்கள் சட்ட விரோதமாக வெளியிடத் தடை விதிக்க வேண்டும். லீடர் படத்தை இந்த வலைத்தளங்கள் சட்டவிரோதமாக வெளியிடாமல் தடுக்க பி.எஸ்.என்.எல் மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று (02-04-26) விசாரணைக்கு வந்தது. இதில், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, லீடர் படத்தைச் சட்ட விரோதமாக வலைத்தளங்களில் வெளியிடத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    

Source link