ஓய்வூதிய திட்டம் அல்லது குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் போது, காலம் செல்லச் செல்ல, உங்கள் முதலீடு தானாகவே பாதுகாப்பானதாக மாறும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால், இதுவரை அது ஒரு ‘நம்பிக்கையாக’ மட்டுமே இருந்தது. ‘தீர்வு சார்ந்த திட்டங்களில்’ முதலீட்டின் ரிஸ்க் குறித்து அந்தந்த நிதி நிறுவனங்களே முடிவு செய்து வந்தன. இந்த சூழலில்தான், அண்மையில் செபி ‘லைப் சைக்கிள்’ பண்டுகளை அறிமுகம் செய்துள்ளது.
இதுவரை ஓய்வூதிய பண்டுகள் என்ற பெயரில் இருந்தாலும், நாம் ஓய்வுபெறும் வயதை நெருங்கும் போதும் அந்த நிதி முழுமையாக பங்கு சந்தையிலேயே முதலீடு செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருந்தது. இது, சந்தை சரியும் போது, நமது வாழ்நாள் சேமிப்பை பாதிக்கும் அபாயத்தை கொண்டிருந்தது.
செபியின் புதிய விதிமுறைப்படி, இனி ஒவ்வொரு நிதியும், ஒரு ‘கிளைடு பாத்’ அதாவது, ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையை பின்பற்ற வேண்டும்.
எப்படி செயல்படும்:
வயது ஏற ஏற, ரிஸ்க் குறையும். இதுதான் லைப் சைக்கிள் பண்டுகளின் சூத்திரம்.
உதாரணத்துக்கு, வயது குறைவாக இருக்கும்போது அல்லது, இலக்கு நீண்ட துாரத்தில் இருக்கும்போது, மேற்கொள்ளப்படும் முதலீட்டு தொகையில், அதிகளவு பங்குகளில் முதலீடு செய்யப்படும்.
ஆனால், நமது இலக்கு நெருங்க நெருங்க (உதாரணமாக ஓய்வு பெற இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே இருக்கும்போது), செய்யப்படும் முதலீடு, தானாகவே பங்குகளில் இருந்து விலகி, பாதுகாப்பான கடன் பத்திரங்களுக்கு மாறும்.
எனவே, முதலீட்டாளர்கள் இனி தங்கள் வயதுக்கு ஏற்ப போர்ட்போலியோவை மாற்றிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை; லைப் சைக்கிள் பண்டுகளே அதை தானாக செய்யும்.
பாதுகாப்பிலும் கூடுதல் கவனம்: “கடன் பத்திரங்கள் மட்டும் பாதுகாப்பானதா?” என்ற கேள்வி எழலாம். இதற்கும் செபி கடிவாளம் போட்டு உள்ளது. லைப் சைக்கிள் பண்டுகள் மிக உயர்தரமான (ஏ.ஏ., மற்றும் அதற்கு மேல்) மதிப்பீடு பெற்ற கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.
மேலும், அந்த பத்திரங்களின் முதிர்வு காலம், நிதியின் முதிர்வு காலத்துக்கு முன்பே முடிவடைய வேண்டும். இதன் வாயிலாக, மறைமுக ரிஸ்க்குகளும் தவிர்க்கப்படுகின்றன.
வெளிப்படையான பெயர்கள்: இனி நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்களை கவர ‘செல்வத்தை உருவாக்குபவர்’ அல்லது ‘அதிவேக வளர்ச்சி’ போன்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளை பயன்படுத்த முடியாது. நிதியின் பெயர் அதன் வகையை மட்டுமே பிரதிபலிக்க வேண்டும். மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளுக்கு செபி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்: இந்த நிதிகள் 5 முதல் 30 ஆண்டுகள் வரையிலான கால அவகாசத்தை கொண்டிருக்கும்.
முதலீட்டாளர்கள் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்பதற்காக, முதல் ஆண்டில் வெளியேறினால் 3 சதவீதம்; இரண்டாம் ஆண்டில் 2 சதவீதம் மற்றும் மூன்றாம் ஆண்டில் ஒரு சதவீதம் என கட்டணம் விதிக்கப்படும்.
செபி அறிமுகம் செய்துள்ள லைப் சைக்கிள் பண்டு, முதலீட்டில் ஒழுக்கத்தை ஒரு விருப்பமாக இல்லாமல், விதியாகவே மாற்றியிருக்கிறது.
