லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடரின் அடுத்த அமர்வில், இந்த தீர்மானம் கொண்டு வரப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஓம் பிர்லாவுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், ஜன., 28ல், பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. கடந்த 1ல், 2026 – 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி எம்.பி.,க்கள் பேசினர்.
தொடர் அமளி
காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதியதாகக் கூறப்படும், இதுவரை வெளியிடப்படாத அவரது சுயசரிதையான, ‘போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி’ என்ற புத்தகத்தை மேற்கோள்காட்டி பேசினார்.
இதற்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள்காட்டி சபையில் பேசக் கூடாது’ என, சபாநாயகர் ஓம் பிர்லாவும் கண்டிப்பு காட்டினார்.
அப்போது துவங்கிய எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் அமளி இதுவரை ஓயவில்லை. அவர்களின் ரகளையால், ஜனாதிபதி உரைக்கு பதிலுரை அளிக்க பிரதமர் மோடியால் லோக்சபாவுக்கே வர முடியாத சூழல் ஏற்பட்டது.
இது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ‘எதிர்க்கட்சி பெண் எம்.பி.,க்கள் பிரதமர் மோடியின் இருக்கையை முற்றுகையிட்டு காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறுப்பு
‘பிரதமர் சபைக்கு வந்தால் அவர்கள் எதிர்பாராத செயல்களில் ஈடுபடக் கூடும் என்ற உறுதியான தகவல் எனக்கு கிடைத்தது. இதனாலேயே பிரதமர் மோடியை பதிலுரை தர சபைக்கு வர வேண்டாம் என, கேட்டுக்கொண்டேன். அதை ஏற்று அவரும் வரவில்லை’ என்றார். இந்த குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்.பி.,க்கள் திட்டவட்டமாக மறுத்தனர்.
இந்நிலையில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வில், இந்த தீர்மானம் கொண்டு வரப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில், காங்., – தி.மு.க., – திரிணமுல் காங்., உட்பட, ‘இண்டி’ கூட்டணி எம்.பி.,க்கள் கையெழுத்திடுவர் என, கூறப்படுகிறது
லோக்சபாவில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், சபாநாயகர் ஓம் பிர்லா மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் தீர்மானம் தோல்வி அடைவது உறுதி. இது எதிர்க்கட்சிகளுக்கும் நன்றாக தெரியும். எனினும், அவருக்கு நெருக்கடி தரவே இந்த தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
– நமது டில்லி நிருபர் –
