ராஜ்பாரி: வங்கதேசத்தில் பத்மா ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பயணிகள் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது; ராஜ்பாரி மாவட்டத்தில் இருந்து டாக்கா சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று, தவுலத்தியாவில் உள்ள 3ம் எண் படகுத்துறையின் முன்பு நேற்று (மார்ச் 25) மாலை 5 மணியளவில் பத்மா ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பஸ்ஸில் இருந்த பயணிகள் நீரில் மூழ்கினர். அவர்களில் ஒரு சிலர் நீச்சல் அடித்து தப்பி வந்து விட்டனர்.
எஞ்சியவர்கள் நீரில் மூழ்கிய உயிரிழந்து விட்டனர். இதுவரையில் 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இரவு 11 மணியளவில் பஸ் கிரேன் மூலம் வெளியே எடுக்கப்பட்டது. இரவு நேரமானதால், மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதிகாலையில் மீண்டும் மீட்பு பணிகள் துவங்கும், இவ்வாறு கூறினர்.
உயிர் பிழைத்த ஒருவர் கூறுகையில், ‘பஸ் நீரில் மூழ்கும் போது, நான் வெளியே குதித்து நீந்தி கரை சேர்ந்து விட்டேன். ஆனால் என்னுடைய மனைவியும், குழந்தையும் ஆற்றுக்குள் மூழ்குவதை என் கண்களால் பார்த்தேன். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் விட்டேன்,’ என்று கண்ணீர் மல்க கூறினார்.
