வங்கதேசத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் பி.என்.பி., அபார வெற்றி! பிரதமர் ஆகிறார் கலீதா ஜியா மகன் தாரிக் ரஹ்மான்

டாக்கா: வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டத்துக்கு பின் நடந்த முதல் பொதுத்தேர்தலில், மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சி, மொத்தமுள்ள 299 தொகுதிகளில் 216 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி, 20 ஆண்டுகளுக்கு பின், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது. கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், 60, பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ளார்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 2024 ஆகஸ்டில், இட ஒதுக்கீடு தொடர்பாக அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்முறை வெடித்ததில், 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நிலைமை மோசமானதை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.

நேரடி போட்டி

இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது. அவாமி லீக் நிர்வாகிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்த இடைக்கால அரசு, தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தது. அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் பிரதமரும், பி.என்.பி., தலைவருமான கலீதா ஜியா, உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகன் தாரிக் ரஹ்மான் கட்சி பொறுப்பை ஏற்றார்.

இந்த சூழலில், பிப்., 12ல் வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என, அந்நாட்டு தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், மறைந்த கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி., – ஜமாத்- – இ- – இஸ்லாமி கட்சி தலைவர் ஷபிகுர் ரஹ்மான் தலைமையிலான 11 கட்சிகளின் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

இக்கூட்டணியில், 2024ல் நடந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர் அமைப்பின் தலைவர்கள் உருவாக்கிய தேசிய குடிமக்கள் கட்சியும் அங்கம் வகிக்கிறது. வங்கதேச பார்லி.,யின் மொத்த பலம் 350. இதில், 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்; இது கட்சிகளின் விகிதாசாரப்படி அளிக்கப்படும்.

இதன்படி, 300 தொகுதிகளில், ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால், 299க்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. 42,779 ஓட்டுச்சாவடிகளில், காலை 7:30 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, மாலை 4:30க்கு முடிந்தது. இதில், 59 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

புதிய அரசு பொதுத் தேர்தலுடன், ‘ஜூலை சாசனம்’ எனப்படும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறித்த பொது ஓட்டெடுப்பும் நடந்தது. இதற்கு, ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என பதிலளிக்கும் வகையில் தனி ஓட்டுச்சீட்டு வழங்கப்பட்டது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை உடனடியாக துவங்கியது.

இதில் துவக்கம் முதலே, பெரும்பாலான இடங்களில் பி.என்.பி., முன்னிலை வகித்தது. பெரும்பான்மைக்கு 151 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், 299 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 216 இடங்களை கைப்பற்றி பி.என்.பி., அபார வெற்றி பெற்றுள்ளது. ஜமாத் – இ – இஸ்லாமி கட்சி கூட்டணி, 76 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. பிற கட்சிகள், ஏழு இடங்களை வென்றன.

இதன் மூலம், வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் முதன்முறையாக பதவியேற்க உள்ளார். புதிய அரசு பதவியேற்க உள்ளதை அடுத்து, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் விரைவில் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த கலீதா ஜியாவின் கட்சி, வங்கதேசத்தில் 1991 – 96, 2001 – 06 வரை ஆட்சி அதிகாரத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி வாழ்த்து

தேர்தலில் பி.என்.பி., வெற்றி பெற்றதை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் நேற்று உரையாடினார். இது குறித்து, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு: தாரி க் ரஹ்மானுடன் பேசியதில் மகிழ்ச்சி. தேர்தல் வெற்றிக்காக அவருக்கு வாழ்த்துகள். வங்கதேச மக்களின் கனவுகளை நிறைவேற்றும் அவரது முயற்சிக்கு, இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும். ஜனநாயக மற்றும் முற்போக்கான வங்கதேசத்திற்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அ தில் குறிப்பிட்டார். முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்ததில் இருந்து, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் கடும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டனர். ஹிந்துக்கள் மற்றும் கோவில்கள் மீது தொடர் தாக்குதல் நடந்தது. சீன ஆதரவாளரான முகமது யூனுஸ், நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர். தற்போது, தாரிக் ரஹ்மான் தலைமையில் புதிய அரசு அமைய உள்ளதால், இந்தியா – வங்கதேச இடையேயான உறவு புத்துயிர் பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பி.என்.பி., ஹிந்து வேட்பாளர் வெற்றி

டாக்காவில் உள்ள டாக்கா 3 தொகுதியில், பி.என்.பி., சார்பில் போட்டியிட்ட ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த கயேஸ்வர் சந்திர ராய், 99,163 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜமாத்- – இ- – இஸ்லாமி வேட்பாளர் முகமது ஷாஹினுார் இஸ்லாம் தோல்வி அடைந்தார். அதே சமயம், ஜமாத் – -இ- – இஸ்லாமி சார்பில், குல்னா 1 தொகுதியில் களமிறங்கிய அக்கட்சியின் ஒரே ஹிந்து வேட்பாளரான கிருஷ்ண நந்தி தோல்வியடைந்தார்.

Source link