வங்கதே பொதுத்தேர்தல்; தேசியவாதக் கட்சி கூட்டணி முன்னிலை

டாக்கா: வங்கதேசத்தில் இன்று நடந்த பொதுத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில், மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான, வங்கதேச தேசியவாதக் கட்சி அடங்கிய கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

வங்கதேசத்தில் 2024ல் வெடித்த மாணவர் போராட்டத்தால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அங்கு ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இன்று (பிப்ரவரி 12) தேர்தல் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் மக்கள் வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அந்தக் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. சமீபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான, வங்கதேச தேசியவாதக் கட்சி அடங்கிய, 10 கட்சிகள் கூட்டணி போட்டியிட்டன. இதேபோன்று ஜமாஅத் – இ – இஸ்லாமி தலைமையிலான கூட்டணியும் களத்தில் உள்ளது. போராட்டங்களை முன்னெடுத்த மாணவர் அமைப்பினரும் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று மாலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், வங்கதேச தேசியவாதக் கட்சிக்கும், ஜமாஅத் – இ – இஸ்லாமி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) கூட்டணி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பிஎன்பி கட்சி தலைவர் தாரிக் ரஹ்மான் டாக்கா தொகுதியில் வெற்றி பெற்றார். அதேபோல, ஜமாஅத் – இ – இஸ்லாமி கூட்டணி 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இதனிடையே, வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் தலைவர் ஷபிகுர் ரகுமான் கூறுகையில், ‘ தேர்தல் முடிவை கட்சி ஏற்றுக்கொள்ளும்,’ எனக் கூறினார்.

Source link