வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: வடை விலை 50 % அதிகரிப்பு

சென்னை: வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, டீக்கடைகளில் விற்கப்படும் வடை, சமோசா, பஜ்ஜி போன்றவற்றின் விலை 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து கப்பலில் கச்சா எண்ணெய், காஸ் போன்றவை வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நம் நாட்டில் வணிக சிலிண்டர் வினியோகத்தில் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது; இது டீக்கடை, தெருவோர டிபன் கடைகள் முதல், உயர்தர ஹோட்டல்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சிலிண்டர் கிடைக்காமல், பலர் டீக்கடை மற்றும் ஹோட்டல்களை மூடி வருகின்றனர்.

சில ஹோட்டல்கள் காலை, இரவு மட்டும் செயல்படுகின்றன. சில ஹோட்டல்களில் உணவுப் பொருட்கள் வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, கள்ள மார்க்கெட்டில், ஒரு வணிக சிலிண்டர் 5,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

பிரச்னையை சமாளிக்க, உணவுப் பொருட்கள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. டீக்கடைகளில் 10 ரூபாய்க்கு விற்பனையான வடை, சமோசா, பஜ்ஜி போன்றவை தற்போது 15 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.

ஏற்கனவே 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஹோட்டல்களில், 20 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. சில டீக்கடைகளில் வடை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் கணேசன் கூறியதாவது:

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, டீக்கடை முதல் பெரிய ஹோட்டல்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிக விலை கொடுத்தாலும், வணிக சிலிண்டர் கிடைப்பது சிரமமாக உள்ளது.

இதனால், மின்சார அடுப்பு மற்றும் விறகு அடுப்புகளில் உணவுகளை சமைத்து சமாளித்து வருகிறோம். இதே நிலைமை நீடித்தால், உணவகங்களை நிரந்தரமாக மூட வேண்டிய நிலை ஏற்படும்.

தங்கம், வெள்ளி விலை தினமும் அதிகரிப்பது போல், உணவுகளின் விலையும் அதிகரிக்கும் சூழல் ஏற்படும். இதற்கு முன் நடந்த வியாபாரம் தற்போது இல்லை. டீக்கடை மற்றும் ஹோட்டல்கள் மூடப்படுவதால், அவற்றில் பணி செய்த ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதை மத்திய அரசு கவனத்தில் வைத்து, வணிக சிலிண்டர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, வடை, பஜ்ஜி போன்றவற்றின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடின்றி கிடைக்கத் துவங்கியதும், விலை குறைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link