வரலாற்றுச் சாதனை படைத்த U 19 இந்திய கிரிக்கெட் அணி; துணை ஜனாதிபதி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து

புதுடில்லி: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது நாட்டிற்கு பெருமை சேர்த்த தருணம் என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (பிப்.6) ஹராரேவில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புடன் நடந்த இப்போட்டியில் இளம் இந்திய அணி, இங்கிலாந்தை துவம்சம் செய்தது. போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை அதகளம் செய்து 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் தலா 15 பவுண்டரிகள், சிக்சர்கள் அடங்கும்.

412 என்ற இலக்கை இந்தியா நிர்ணயிக்க, ,இங்கிலாந்து இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 311 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை துவம்சம் செய்து இளம் இந்திய அணி சாம்பியன் ஆனது. இந்திய அணியின் வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பலரும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி;

ஜிம்பாப்வேயின் ஹராரேயில் ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்தியாவின் இளம் சாம்பியன்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். 6வது உலகச்சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது உண்மையில் வரலாற்றுச் சாதனை. சாதனையை படைத்த இளம்வீரர் பைவப் சூர்யவன்ஷிக்கு சிறப்பு பாராட்டுகள்.

நாட்டிற்கு பெருமை சேர்த்த இத்தருணத்தில் அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே மற்றும் முழு அணிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்துக் கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி;

ஐசிசி ஆண்கள் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்று நாட்டுக்கு மற்றொரு பெருமைமிக்க தருணத்தை வழங்கிய இந்திய அணிக்கு வாழ்த்துகள். இது உண்மையான திறமை மற்றும் மன உறுதிக்கு கிடைத்த வெற்றியாகும்.

இறுதிப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியின் அற்புதமான இன்னிங்ஸ், அசாதாரண ஆட்டம் ஆண்டுகள் பல கடந்தாலும் என்றும் நினைவு கூரப்படும். உலக அரங்கில் இந்தியாவை உயர்த்திய இளம்படையினர் மேலும் வெற்றிகளை படைப்பர்.

எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வாழ்த்துச் செய்தி;

19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் மீண்டும் உலக சாம்பியன் ஆன இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வெற்றிக்கு காரணமான வைபவ் சூர்யவன்ஷியின் அற்புதமான சதத்திற்கு சிறந்த பாராட்டுகள். அமைதியான தலைமை மூலம் முக்கிய பங்களிப்பை வழங்கிய கேப்டன் ஆயுஷ் மாத்ரே, பந்துவீச்சாளர்களுக்கு சிறப்பு பாராட்டுகள். இது தேசத்திற்கு பெருமையான தருணம், இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் மிகுந்த பிரகாசமாக தெரிகிறது.

Source link