தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இ-சேவை மையங்கள் மக்களுக்குத் தேவையான வருவாய்ச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பட்டா தொடர்பான அனைத்து விதமான சேவைகளையும் வழங்கி வருகின்றன. கடந்த 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 843 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சூழலில்தான் தற்போது ஆட்சி மாற்றம் நடந்து, தமிழக வெற்றிக் கழக அரசுபொறுப்பேற்றுள்ளது. தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மூலமாக இதுவரை வழங்கப்பட்டு வந்த சேவைகளை எளிமையானதாகவும், மக்களுக்கு வேகமாகக் கொண்டு சேர்க்கும் வகையிலும் ” வெற்றி தமிழ்நாடு இ-சேவை 2.0 ” என்ற புதிய திட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது. மேலும், இதற்கான டெண்டர் அறிவிப்பும் தற்போது வெளியாகியிருக்கிறது.
இ-சேவை மையம் நடத்தத் தகுதியான தொழில்நுட்ப நிறுவனங்கள், வருகிற நவம்பர் 3-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் இந்த அரசின் டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் புதிய 2.0 சேவையின் மூலம் அரசின் இ-சேவைத் தளம் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு, வேகமான சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 அம்ச வசதிகள்
இந்த வெற்றி தமிழ்நாடு இ-சேவை மையம் 2.0 அமைந்தால், ஐந்து அம்ச வசதிகள் மக்களுக்குச் சென்றுசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1. மின் கட்டணம் முதல் ஜாதிச் சான்றிதழ் வரை 200-க்கும் மேற்பட்ட சேவைகள்: மின் கட்டணம் முதல் ஜாதிச் சான்றிதழ் வரை 200-க்கும் மேற்பட்ட சேவைகள் எளிமையான முறையில், அதுவும் வேகமாக, ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்படும்.
2. சர்வர் பிரச்சினைக்குத் தீர்வு:அதுமட்டுமின்றி, ஒரு பொதுவான அறிவிப்பு வரும் நேரத்தில் பல பேர் ஒரே நேரத்தில் லாகின் செய்யும்போது சர்வர் டவுன் ஏற்படும். 2.0-வில் இந்தப் பிரச்சினையைக் குறைப்பதற்கான வேலைகள் நடைபெறும் எனவும், சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் சேவைகள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
3. ஆதார், பான் கார்டு விவரங்களுக்குப் பாதுகாப்பு: ஆதார், பான் கார்டு உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை மற்றவர்கள் பார்க்காமல் இருக்க, அதிநவீன பாதுகாப்புத் தொழில்நுட்பம் மற்றும் சைபர் செக்யூரிட்டி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4. மொபைல் மூலம் பயன்படுத்தும் வசதி: மேலும், புதிய 2.0 தளம் முழுக்க முழுக்க மொபைல் ஃப்ரெண்ட்லியாக இருக்கும். எல்லாச் சேவைகளுக்கும் கம்ப்யூட்டர் சென்டர்களுக்குச் செல்ல வேண்டிய தேவை இல்லை எனவும் சொல்லப்படுகிறது.
5. விண்ணப்பத்தின் நிலையை உடனடியாக அறியும் வசதி: மேலும், நீங்கள் விண்ணப்பித்த மனுவின் நிலை என்ன, அது எப்போது கிடைக்கும் என்பதை உடனடியாகவும் நேரடியாகவும் தெரிந்துகொள்ள, வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் உடனடி ஸ்டேட்டஸ் வழங்கப்படும்.
இந்த வெற்றி தமிழ்நாடு இ-சேவை 2.0 திட்டம் அமலுக்கு வந்தால், மக்களின் கோரிக்கைகள் எளிதில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
